திருச்சி : தமிழகத்தில், 8,000த்துக்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், ஆறாம் வகுப்பு முதல், கைத்தொழில்களான தையல், இசை, ஓவியம் ஆகியவை கற்று தர, ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.சில ஆண்டுகளாக அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவு காரணமாக, கைத்தொழில் ஆசிரியர் பணியிடங்கள் உபரி ஆசிரியர் பணியிடமாக மாற்றப்பட்டு வருவதன் காரணமாக, பணி ஓய்வு போன்றவற்றால் காலியாகும் பணியிடங்களில், புதிய கைத்தொழில் ஆசிரியர்களை நியமிக்க முடியாத சூழல் உருவாகி உள்ளது.இதனால் அரசு உதவிபெறும் நடுநிலை மற்றும் உயர் நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கைத்தொழில் கற்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. பிரச்னையை தீர்க்க, மாணவர்கள் - ஆசிரியர்கள் விகிதாச்சார முறையில் உள்ள நிபந்தனையை தளர்த்த வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தமிழக ஆசிரியர் கூட்டணியின் அகில இந்திய செயலர் ஐபெட்டோ அண்ணாமலை கூறியதாவது:தமிழகத்தில், 10,000த்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. மாணவர்களின் எண்ணிக்கையை கைத்தொழில் ஆசிரியர்கள் பணியிடத்தை நிரப்புவதில் பார்க்கக்கூடாது. கைத்தொழில் ஆசிரியர் காலி பணியிடம் நிரப்ப, 100 மாணவர்கள் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.ஆகையால், 6, 7, 8ம் வகுப்புகளில், வகுப்புக்கு தலா, 25 மாணவர்கள் இருந்தாலே, கைத்தொழில் ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்பலாம் என்று அரசு உத்தரவிட வேண்டும்.மாணவர்கள் புதிதாக பல விஷங்களை கற்க வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தும் நிலையில், கைத்தொழில் ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்பும் விஷயத்தில் ஏன் இப்படி முரண்பாடாக முடிவு எடுக்கின்றனர் என்று தெரியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.