காய்ச்சல் கண்டறியும் கருவி; ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வழங்கப்படுமா?
திருப்பூர் ; காய்ச்சல் மற்றும் உடல் பாதிப்பின் தன்மையை துல்லியமாக கண்டறிய, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு, 'செல் கவுன்டர்' கருவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.கிராமங்களில் வசிப்போர், காய்ச்சல், தொடர் உடல் பாதிப்பால் சிரமப்படுகின்றனர். இவர்களுக்கான காய்ச்சல் பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே துல்லியமாக கண்டறியாததால், குணமாக கூடுதல் நாட்கள் பிடிப்பதாக மருத்துவ துறையினர் தெரிவிக்கின்றனர்.இது குறித்து, மருத்துவ பணிகள் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் கூறியதாவது:நகரங்களில் வசிப்பவர்கள், அரசு மருத்துவமனைகளுக்கு சென்றால், காய்ச்சல் என்ன வகை என்பதை துல்லியமாக கண்டறியும் வசதி உள்ளது. கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் துல்லிய வசதிகள் இன்னமும் உருவாக்கப்படவில்லை. அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில், 'செல் கவுன்டர்' கருவி உள்ளதை போல, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு, 'செல்கவுன்டர்' கருவி வழங்க வேண்டும். இக்கருவி வாயிலாக காய்ச்சல் பாதிக்கப்படுவோரின் ரத்த மாதிரியை எடுத்து, தட்டணு, வெள்ளை மற்றும் சிவப்பணு எண்ணிக்கையை துல்லியமாக கண்டறிய முடியும். நோயாளியின் உடல் நிலையறிந்து, காய்ச்சலின் தன்மைக்கு ஏற்ப சிகிச்சையை ஆரம்ப நிலையிலேயே துவங்க முடியும். இதனால், நீண்ட நாள் பாதிப்பு, தொடர் சிகிச்சை உள்ளிட்ட நோயாளிகளுக்கான சிரமங்கள் தவிர்க்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.