பயங்கரவாதிகள் மூளைச்சலவை செய்த 100 பட்டதாரி இளைஞர்கள் மீட்பு
சென்னை: ஐ.எஸ்., பயங்கரவாதிகள், பொறியியல் மற்றும் தகவல் தொழில் நுட்பம் பயின்ற நபர்களை, மூளைச்சலவை செய்து, தங்கள் அமைப்புக்கு இழுப்பது, போலீஸ் அதிகாரிகள் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுவரை பயங்கரவாதிகளால் மூளை சலவை செய்யப்பட்ட, 100 இளைஞர்களை போலீசார் மீட்டுள்ளனர். இது குறித்து போலீசார் கூறியதாவது: தடை செய்யப்பட்ட முஸ்லிம் மாணவர் அமைப்பான 'சிமி'யில், கோவை மாவட்ட தலைவராக இருந்தவர் அசாருதீன். தற்கொலை படை இவரை, 2019, ஏப்., 21ல், இலங்கையில் ஈஸ்டர் நாளில் தொடர் குண்டு வெடிப்புகளை நடத்திய, ஐ.எஸ்., பயங்கரவாதி சஹ்ரான் ஹாசிம், மூளைச்சலவை செய்து, தங்கள் அமைப்பில் சேர்த்தார். அசாருதீனால் ஐ.எஸ்., பயங்கரவாதியாக உருவாக்கப்பட்டவர் ஜமேஷா முபின். இவர், கடந்த, 2022 அக்., 23ல், கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், தற்கொலை படையாகி மாறி, கார் குண்டு வெடிப்பை நடத்தினார். இந்த வழக்கில், 17 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில், 12 பேர் பட்டப்படிப்பு மற்றும் பட்டய பொறியியல் கல்வி முடித்தவர்கள். இக்கும்பலுக்கு தலைவனாக செயல்பட்ட ஜமேஷா முபின், பொறியியல் பட்டதாரி. ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பினர், எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடிய, உயர்கல்வி முடித்தவர்களை, குறி வைத்து வளைத்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் மூழ்கி கிடக்கும், இது போன்ற நபர்களை, எளிதில் தங்கள் பக்கம் இழுத்து விடுகின்றனர். மசூதிகளில் தொழுகைக்கு செல்லும்போது குழுவாக சேர்ந்து, தங்கள் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர். முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் இடங்களில், அரசியல் ஆர்வம் உள்ள இளைஞர்களை கண்டறிந்து, அவர்களிடம் பல்வேறு கருத்துக்களை திரித்து கூறி, தங்கள் பக்கம் இழுக்கின்றனர். இது போன்ற நபர்களை கண்காணித்து, நடவடிக்கை எடுத்து வருகிறோம். நல்வழிப்படுத்தினோம் கடந்த, 2021 முதல் இந்த ஆண்டு வரை, பயங்கரவாதிகளால் மூளைச்சலவை செய்யப்பட்ட, 100 பேரை மீட்டுள்ளோம். இவர்களுக்கு, ஐ.எஸ்., பயங்கரவாதிகள் கற்பித்துள்ளவை, தவறான தகவல்கள் என, முஸ்லிம் மத குருக்கள் வாயிலாக தெளிவுபடுத்தினோம். மேலும், உளவியல் நிபுணர்கள் வாயிலாக, 'கவுன்சிலிங்' அளித்து நல்வழிப்படுத்தினோம். தற்போது, அவர்களில் பலர் திருணமாகி, மனைவி, குழந்தைகளுடன் வசிக்கின்றனர். சிலர் ஆட்டோ ஓட்டுகின்றனர். சிலர் சொந்தமாக தொழில் செய்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.