வாட்ஸாப் குறுஞ்செய்தி அனுப்பி 1,000 போலீசிடம் மோசடி முயற்சி
சென்னை:எஸ்.பி.ஐ., வங்கி பெயரில், 1,000க்கும் மேற்பட்ட போலீசாரை குறிவைத்து, 'சைபர்' குற்றவாளிகள் பணமோசடியில் ஈடுபட முயன்றுஉள்ளனர்.தமிழக காவல் துறையில் பணிபுரியும் பெரும்பாலான போலீசார், எஸ்.பி.ஐ., வங்கியில் கணக்கு வைத்துள்ளனர். இவர்களை குறிவைத்து, சைபர் குற்றவாளிகள் பணமோசடிக்கு முயற்சி செய்வது அதிகரித்து வருகிறது.'உங்கள் வங்கிக் கணக்கிற்கு, 5,899 ரூபாய் ரிவார்டு பாயின்ட் வழங்கப்பட்டுள்ளது. அதை இன்றே ஆக்டிவேட் செய்ய வேண்டும்' என, ஒரே நாளில் 1,000க்கும் மேற்பட்ட போலீசாருக்கு, எஸ்.பி.ஐ., வங்கியின் பெயரில் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு உள்ளன.இதுகுறித்து, அந்த போலீசார் கூறியதாவது: கமிஷனர் மற்றும் மாவட்ட எஸ்.பி., அலுவலகங்களில், எஸ்.பி.ஐ., வங்கி நடத்திய முகாம் வாயிலாக கணக்குகள் துவக்கினோம். அப்போது, எங்கள் மொபைல் போன் எண்கள் உள்ளிட்ட விபரங்களையும் சமர்ப்பித்தோம்.இந்த மொபைல் போன் எண்கள், 'சைபர்' குற்றவாளிகளுக்கு எப்படி சென்றது என்று தெரியவில்லை. அவர்கள் எங்களின் வாட்ஸாப் குழுக்களை முடக்கி, எங்களின் தனிப்பட்ட 'வாட்ஸாப்' எண்ணுக்கு பணமோசடி செய்வதற்கான குறுஞ்செய்திகளை அனுப்பி வருகின்றனர். இதுபற்றி, போலீசார் மற்றும் அதிகாரிகள் பயன்படுத்தி வரும், வாட்ஸாப் குழுக்கள் வாயிலாக எச்சரிக்கை செய்து வருகிறோம். சைபர் குற்றத்தடுப்புப் பிரிவு போலீசாரின் கவனத்திற்கும் எடுத்துச் சென்றுஉள்ளோம்.அவர்கள் ஸ்மார்ட் போன்கள் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆலோசனை வழங்கி உள்ளனர். அதன்படி செயல்பட்டு வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.