புதிய ரேஷன் கார்டு கேட்டு 1.10 லட்சம் பேர் காத்திருப்பு
சென்னை:மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில், கூடுதல் பயனாளிகளை சேர்க்கும் பணி துவங்கி உள்ளதால், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம் செய்தவர்கள், அதை விரைவாக வழங்கும்படி, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த, 2023ல், மகளிருக்கு மாதம், 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை அரசு அமல்படுத்தியது. திருமணமாகி கூட்டு குடும்பமாக வசித்தவர்கள், உரிமைத்தொகை பெறுவதற்காக, புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தனர். தற்போது வரை 1.10 லட்சம் பேர் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. உரிமைத் தொகை கேட்டு, அரசு தற்போது மீண்டும் விண்ணப்பிக்கச் சொல்கிறது. ஆனால், கார்டு இல்லாமல் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ரேஷன் கார்டுகளை விரைந்து வழங்க வேண்டும் என்று, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.