உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிதி நிறுவன மோசடி வழக்கு ஜூலை வரை 112 பேர் கைது

நிதி நிறுவன மோசடி வழக்கு ஜூலை வரை 112 பேர் கைது

சென்னை:நிதி நிறுவன மோசடி தொடர்பாக, இந்த ஆண்டில் ஜூலை வரை, 112 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்,” என, பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு ஐ.ஜி., சந்தோஷ்குமார் கூறினார். மேலும், அவர் கூறியதாவது: நிதி நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக நடந்த பண மோசடிகள் தொடர்பாக, 'டான்பிட்' எனும் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அந்த வகையில், 4.29 லட்சம் முதலீட்டாளர்களிடம், 13,444 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக, 1,374 வழக்குகள் பதிவு செய்துள்ளோம். இவற்றில், 853 வழக்குகள் உரிய விசாரணைக்கு பின் முடித்து வைக்கப்பட்டன; 521 வழக்குகள் விசாரணை நிலையில் உள்ளது. பண மோசடி செய்த நபர்களிடம் இருந்து, 978 கோடி ரூபாயை முடக்கி உள்ளோம்; 78 கோடி ரூபாய் மதிப்புள்ள வாகனங்கள் பறிமுதல் ஆகியுள்ளன; 3,880 கோடி ரூபாய் சொத்துக்களை பறிமுதல் செய்ய அடையாளம் கண்டுள்ளோம். மோசடி கும்பலிடம் பறிமுதல் செய்யப்பட்ட, 358 கோடி ரூபாயை, 15,169 முதலீட்டாளர்களுக்கு திரும்ப தந்துள்ளோம். இந்த ஆண்டில் ஜூலை வரை, 112 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த, 65 பேரை கைது செய்து, மீண்டும் சிறையில் அடைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ