வெளி மாநில தொழிலாளர்கள் 13.51 லட்சம் பேர் பதிவு
சென்னை: தமிழகத்தில் இதுவரை 13.51 லட்சம் வெளி மாநில தொழிலாளர்கள், தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர். அவர்களை தமிழகம் அழைத்து வர, 326 நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கட்டுமானம், உற்பத்தி துறை, ஜவுளி, உணவு என, பல்வேறு துறைகளில் லட்சக்கணக்கான வெளி மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதி செய்ய வேண்டியது, தொழிலாளர் நலத்துறையின் பணியாக உள்ளது. எனவே, தமிழகம் முழுதும் நிறுவனங்களில் பணிபுரியும், வெளி மாநிலத் தொழிலாளர்கள் விபரங்களை, தொழிலாளர் நலத்துறை சேகரித்து வருகிறது. இதுவரை 13.51 லட்சம் வெளி மாநிலத் தொழிலாளர்கள், தங்கள் பெயரை, தொழிலாளர் நலத்துறையில் பதிவு செய்துள்ளனர். வெளி மாநில தொழிலாளர்களை, அழைத்து வந்து பணியமர்த்த, சட்டப்படி உரிமம் பெற வேண்டும். இதுவரை 326 நிறுவனங்கள் உரிமம் பெற்றுள்ளன. இது குறித்து, சமூக ஆர்வலர்கள் மற்றும் தொழிலாளர்கள் சிலர் கூறியதாவது: தமிழகத்தில், வெளி மாநில தொழிலாளர்களை அழைத்து வந்து, பணியில் சேர்க்க, 326 நிறுவனங்கள் மட்டும் உரிமம் பெற்றுள்ளன. அனுமதியின்றி வெளி மாநில தொழிலாளர்களை பணியமர்த்தும் நிறுவன ங்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களைக் கண்டறிந்து, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.