போலி என்.சி.சி., முகாம் வழக்கு ஜாமின் மனுக்கள் மீது 14ல் தீர்ப்பு
சென்னை:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலி என்.சி.சி., முகாம் நடத்திய விவகாரத்தில், கைதான பள்ளி முதல்வர், தாளாளர் உள்ளிட்டோரின் ஜாமின் மனுக்களின் உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் வரும், 14க்கு தள்ளி வைத்துள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் நடந்த போலி என்.சி.சி., முகாமில் பங்கேற்ற மாணவியருக்கு, என்.சி.சி., பயிற்றுனரான காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த சிவராமன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் வந்தது. அதைத் தொடர்ந்து, சிவராமன் கைது செய்யப்பட்டார். கைது
பள்ளி முதல்வர் சதீஷ்குமார், தாளாளர் சாம்சன்வெஸ்லி உள்ளிட்டோரையும், போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், கைது செய்யப்பட்டிருந்த சிவராமன், எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்ததாக, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். போலி என்.சி.சி., முகாம் நடத்திய விவகாரத்தில் கைதான பள்ளி முதல்வர், தாளாளர், ஆசிரியை உள்ளிட்டோர் ஜாமின் கோரி, உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.மனுக்களில், 'இந்த வழக்கில் எங்களுக்கு தொடர்பு இல்லை. தேவையின்றி சேர்த்துள்ளனர்' என்று கூறியுள்ளனர். மனுக்கள், நீதிபதி தனபால் முன், விசாரணைக்கு வந்தன. தள்ளிவைப்பு
போலீஸ் தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி, ''பாலியல் தொந்தரவு அளித்ததாக மாணவியர் புகார் கூறியும், அதை விசாரிக்காமல், அலட்சியமாக நடந்துள்ளனர். ஜாமின் வழங்கினால், சாட்சியங்களை கலைக்க வாய்ப்பு உள்ளது. எனவே, ஜாமின் அளிக்கக் கூடாது,'' என்றார்.இதையடுத்து, ஜாமின் மனுக்களின் உத்தரவை, வரும் 14க்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.