சென்னை: தமிழக சந்தைகளில் இருந்து, 1.47 லட்சம் கிலோ ஓ.ஆர்.எஸ்., பெயரிலான திரவ பானத்தை, உணவு பாதுகாப்பு துறை பறிமுதல் செய்துள்ளது. பொதுவாக, ஓ.ஆர்.எஸ்., என்ற உப்பு, சர்க்கரை கரைசல், வயிற்றுப்போக்கு நோய்களுக்கான சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கிறது. வயிற்றுப்போக்கால், உடலில் நீர்ச்சத்து மற்றும் அத்தியா வசிய உப்புகளை கணிசமாக இழக்க நேரிடும். முறையாக சிகிச்சை பெறாவிட்டால், கடுமையான நீரிழப்பு மற்றும் மரணம் ஏற்படலாம். உலக சுகாதார நிறுவனத்தால், அங்கீகரிக்கப்பட்ட உப்பு, சர்க்கரை பொட்டலத்தை பயன் படுத்துவதன் வாயிலாக, வயிற்று போக்கால் ஏற்படும் நீரிழப்பை தவிர்க்க முடியும். ஒரு உப்பு, சர்க்கரை பொட்டலத்தின், 20.5 கிராம் மொத்த எடையில், 2.6 கிராம் சோடியம் குளோரைடு, 13.5 கிராம் குளுக்கோஸ், 1.5 கிராம் பொட்டாசியம் குளோரைடு, 2.9 கிராம் ட்ரைசோடியம் சிட்ரேட் போன்றவை உள்ளன. நன்கு கொதிக்க வைத்த ஒரு லிட்டர் தண்ணீர் ஆறிய பின், ஓ.ஆர்.எஸ்., பொடியை அந் நீரில் கரைத்து, 24 மணி நேரத்தில் பருக வேண்டும். இதற்கிடையில், திரவ உப்பு, சர்க்கரை கரைசல் என, சந்தையில் வெவ்வேறு பெயர்களில் திரவ பானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. திரவ உப்பு, சர்க்கரை கரைசல் அல்லது நீர்ச்சத்து பானங்கள் என்று விளம்பரப் படுத்தப்படும் இந்த பானங்கள், ஆற்றலை மேம்படுத்தக் கூடியவை ஆக மட்டுமே பயன் படுகின்றன. இந்த பானங்களை பருகு வதால், மருத்துவ ரீதியாக வயிற்றுப்போக்கால் ஏற்படும் நீரிழப்பை சரி செய்ய இயலாது. இந்த தயாரிப்புகளில், தாது உப்புகள், குளுக்கோஸ் போன்றவை உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்திய அளவில் இல்லை. எனவே, இந்த வகை பானங்கள் வயிற்றுப்போக்கையும், நீரிழப்பையும் அதிகரிக்கச் செய்யும் என, தமிழக பொது சுகாதாரத்துறை ஏற்கனவே எச்சரித்து இருந்தது. இந்நிலையில், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு, ஓ.ஆர்.எஸ்., பெயரிலான திரவ பானம் விற்பனைக்கு தடை விதித்துள்ளது. மேலும், சந்தையில் இருந்து அப்பானங்களை அப்புறப் படுத்தும் பணியையும், உணவு பாதுகாப்பு துறை துவக்கி உள்ளது. இதுகுறித்து,தமிழக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது: உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்த உப்பு, சர்க்கரை கரைசல் பொட்டலங்கள், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாகவும், தனியார் மருந்தகங்களில் விலைக்கும் கிடைக் கின்றன. எனவே, ஓ.ஆர்.எஸ்., பயன்படுத்தும் போது, அதன் உட்பொருட்கள், உலக சுகாதார நிறுவன தரநிலைக்குள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தரமான ஓ.ஆர்.எஸ்., பொட்டலங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தற்போது, மத்திய அரசின் நடவடிக்கைக்கு பின், தமிழகத்தில் மூன்று ஓ.ஆர்.எஸ்., திரவ பானம் தயாரிப்பு ஆலை மற்றும் சந்தைகளில் இருந்து, 1.47 லட்சம் கிலோ பறிமுதல் செய்யப்பட்டு அகற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து, அனைத்து மாவட்டங்கள் சார்பில், மருந்தகங்களில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தடையை மீறி யாரேனும் விற்றால், உணவு பாதுகாப்பு சட்டத்தில் நட வடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.