சென்னை: தமிழ் செய்தி தொலைக்காட்சியான புதிய தலைமுறை, 'யு - டியூப்' தளத்தில், 1.5 கோடி சந்தாதாரர்களைக் கடந்துள்ளது. தமிழகத்தில் இருந்து ஒளிபரப்பாகும், 24 மணி நேர தமிழ் செய்தி தொலைக்காட்சியான புதிய தலைமுறை, சமூக வலைதளங்களில் செயல்பட்டு வருகிறது . யு- - டியூப் தளத்தில், 1.5 கோடி பின் தொடர்பவர்களை பெற்று, தென் மாநிலங்களின் டிஜிட்டல் செய்தி உலகில், வலுவான இடத்தை புதிய தலைமுறை பெற்றுள்ளது. இந்த சாதனையை கொண்டாடும் வகையில், சென்னையில் உள்ள, புதிய தலைமுறை தலைமை அலுவலகத்தில், சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் பேசிய புதிய தலைமுறை குழுமத்தின் தலைவர் சத்யநாராயணன், ''நேர்மையான இதழியல்தான் புதிய தலைமுறையின் அடையாளம். சமரசமின்றி நேர்மைப் பாதையில் பயணிப்போம்,'' என்றார். இந்நிகழ்ச்சியில், புதிய தலைமுறை ஆசிரியர் சமஸ், டிஜிட்டல் பிரிவு செயல் ஆசிரியர் திருப்பதி, தலைமை செயல் அதிகாரி ராஜாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கடந்த 2023ல், ஒரு கோடி சந்தாதாரர்களை எட்டிய, முதல் தமிழ் செய்தி தொலைக்காட்சி என்ற பெருமையை, புதிய தலைமுறை எட்டியது. இரண்டு ஆண்டுகளில், 50 லட்சம் புதியவர் களுடன், 1.5 கோடி சந்தாதாரர்களை பெற்று, சாதனை படைத்துள்ளதாக, புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.