தரங்கம்பாடி கோட்டையில் இருந்த 17ஆம் நூற்றாண்டு வாள் மாயம்
மயிலாடுதுறை: தரங்கம்பாடி கோட்டை அருங்காட்சியகத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரும்பு வாள் ஒன்று மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரையில் 16ம் நூற்றாண்டில் டென்மார்க் ஆட்சியாளர்களின் டேனிஷ் கோட்டை அமைந்துள்ளது. தற்போது தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ள இந்த கோட்டையில் புராதன பொருட்களை பாதுகாக்கும் அருங்காட்சியகம் உள்ளது. கோட்டையில் தொல்லியல் துறை சார்பில் 6 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது இந்த கோட்டையின் பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இந்நிலையில் கோட்டை அருங்காட்சியகத்தில் கண்ணாடி பெட்டியில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த 17 ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட இரும்பினால் ஆன ஒன்றரை அடி நீளம் உள்ள கைப்பிடியுடன் கூடிய வாள் இன்று(டிச.,26) காணவில்லை. அருங்காட்சியகத்தை ஊழியர்கள் திறந்த போது அது காணாமல் போனது தெரியவந்தது. விலைமதிப்பற்ற பழமையான வாள் காணாமல் போனது குறித்து தொல்லியல் துறை இளநிலை உதவியாளர் தினேஷ் குமார் பொறையார் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின் பேரில் போலீசார் இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து தனிப்படை அமைத்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.