தீபாவளி கொண்டாட முடியாமல் 2 லட்சம் நெசவாளர்கள் தவிப்பு!
சென்னை:'நெசவாளர்களுக்கு வழங்க வேண்டிய அரசு மானியத்தை உடனே வழங்க வேண்டும்' என, அ.தி.முக., பொதுச்செயலர் பழனிசாமி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:தமிழகத்தில், 1,200-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இதில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட நெசவாளர் குடும்பங்கள், இச்சங்கங்களை நம்பி உள்ளன. ஜெயலலிதா காலத்திலும், தொடர்ந்து என் தலைமையிலான அரசிலும், 10 ஆண்டுகளில், 1,400 கோடி ரூபாய் மானியத் தொகையாக, 2 லட்சம் நெசவாளர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.இதனால், நெசவாளர்கள் ஆண்டுதோறும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடினர். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், மாணவியர், அரசு மற்றும் தனியார் நிறுவன பெண்களிடையே கைத்தறி சேலைகள் கட்டுவதை இயக்கமாகவே செயல்படுத்தப்பட்டது.இதன் வாயிலாக, நெசவாளர்களின் குடும்பத்தில் விளக்கேற்றியதை, தமிழக மக்கள் யாரும் மறந்துவிட முடியாது. கடந்த ஓராண்டு காலமாக, நெசவாளர்களுக்கு வழங்க வேண்டிய தள்ளுபடி மானியத் தொகை, இதுவரை தி.மு.க., அரசு வழங்கவில்லை. இதனால், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட நெசவாளர் குடும்பங்கள் இந்த ஆண்டு தீபாவளி திருநாளை கொண்டாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தி.மு.க., அரசில், 2022, 2023 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் பொங்கல் வேட்டி, சேலைகள் நெய்யும் பணிகள், தமிழக நெசவாளர்களுக்கு வழங்காமல், வேறு மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டன. இந்த நடவடிக்கையால், பல நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் பாதிக்கப்பட்டன. கடந்த 40 மாத கால தி.மு.க., ஆட்சியில் ஒருசில சங்கங்கள் தவிர, அனைத்து நெசவாளர் கூட்டுறவு சங்கங்களும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. பல கைத்தறி சங்கங்கள் இயங்க முடியாத நிலையில் உள்ளன.எனவே, அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் இருப்பில் உள்ள கைத்தறி துணிகளை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். மகளிர் அனைவரும் மீண்டும் கைத்தறி சேலைகள் கட்டுவதை ஊக்கப்படுத்த வேண்டும்.நெசவாளர்களுக்கு வழங்க வேண்டிய அரசின் மானியத்தை உடனே வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.