உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்டாலின் நடத்தும் மாநாட்டில் பங்கேற்க 20 கட்சிகள் சம்மதம்

ஸ்டாலின் நடத்தும் மாநாட்டில் பங்கேற்க 20 கட்சிகள் சம்மதம்

சென்னை : மக்கள் தொகை அடிப்படையில், லோக்சபா தொகுதிகளை மறுவரையறை செய்யும் மத்திய அரசின் திட்டத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதற்கு ஆதரவாக, பல மாநிலங்களை திரட்டும் வகையில் , வரும், 22ம் தேதி சென்னையில் கூட்டு நடவடிக்கைக் குழு மாநாடு நடத்துகிறார். அதில் பங்கேற்க, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 20 கட்சிகள் சம்மதம் தெரிவித்துள்ளன. மூன்று மாநில முதல்வர்கள் வர உள்ளனர்.நாட்டில் அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. அதன் முடிவு அடிப்படையில், லோக்சபா தொகுதிகளை மறுசீரமைப்பு செய்தால், தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில், தொகுதிகள் எண்ணிக்கை குறையும்; வடமாநிலங்களில் அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

அரசுக்கு ஆதரவு

இது, தென்மாநிலங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், மக்கள் தொகை அடிப்படையில், தொகுதி மறுவரையறை செய்யக்கூடாது என்பதை வலியுறுத்துவதற்காக, தமிழக அளவில், கடந்த, 5ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடந்தது. பா.ஜ., உள்ளிட்ட ஒரு சில கட்சிகள் தவிர்த்து, பெரும்பாலான கட்சி தலைவர்கள் பங்கேற்று அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர்.கூட்டத்தில், லோக்சபாவின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், 1971ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில், லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில், தற்போது மாநிலங்களுக்கு எந்த விகிதத்தில் தொகுதிகள் எண்ணிக்கை உள்ளதோ, அதே விகிதத்தில், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கான தொகுதிகள் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இக்கோரிக்கைகளை வலியுறுத்தவும், அவை சார்ந்த போராட்டத்தை முன்னெடுக்கவும், தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களை சேர்ந்த, எம்.பி.,க்கள் உள்ள கட்சிகள் அடங்கிய, கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சென்னையில் வரும் 22ம் தேதி, கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தை நடத்த, முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்தார். இதில் பங்கேற்கும்படி, ஏழு மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதினார்.பின், அந்த மாநில முதல்வர்கள் மற்றும் பா.ஜ., அல்லாத கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து அழைக்க, அமைச்சர்கள் மற்றும் எம்.பி.,க்கள் அடங்கிய குழுவையும் அனுப்பி வைத்தார். சென்னை கிண்டியில் உள்ள, ஐ.டி.சி., கிராண்ட் சோழா ஹோட்டலில், வரும் 22ம் தேதி கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடக்க உள்ளது. இதில், கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த்மான், கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

மவுனம் காக்கிறது

காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உட்பட, 20 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இதுகுறித்து, தி.மு.க., மருத்துவர் அணி செயலர் எழிலன் அளித்த பேட்டி:முன்கூட்டியே வரும் ஆபத்தை உணர்ந்து, தொகுதி மறுவரையறை தொடர்பாக, ஏழு மாநில முதல்வர்களுக்கு முதல்வர் கடிதம் எழுதினார். மத்திய பா.ஜ., அரசு என்ன சிந்தனையில் உள்ளது என்று கேட்டு, தி.மு.க., - எம்.பி.,க்கள் பார்லிமென்டில் குரல் எழுப்பினர். ஒத்திவைப்பு தீர்மானத்தை எடுக்கும்படி கூறினர்; மத்திய அரசு மவுனம் காக்கிறது.தொகுதி மறுவரையறை என்பது, மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு பிறகு நடக்கும். கடந்த 1951ல் ஒரு எம்.பி.,க்கு, 4.75 லட்சம் மக்கள் என்ற அடிப்படையில், 494 இடங்கள் இருந்தன. அதன்பின், 1961 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின், 8.4 லட்சம் மக்களுக்கு ஒரு எம்.பி., என கணக்கிட்டு, 522 தொகுதிகள் வந்தன. அடுத்து, 1971ம் ஆண்டு ஒரு எம்.பி.,க்கு 10.1 லட்சம் பேர் இருந்ததால், 543 எம்.பி.,க்கள் இடம் வந்தன. கடந்த 1976ம் ஆண்டு, தொகுதி மறுவரையறை பணியை, 25 ஆண்டுகள் தள்ளிவைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அடுத்து, 2001ம் ஆண்டு மறுவரையறை செய்ய வேண்டி இருந்தது. அப்போது கருணாநிதி, சந்திரபாபு நாயுடு ஆகியோர், மறுவரையறையை தள்ளி வைக்கும்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிரதமராக இருந்த வாஜ்பாய்க்கு கடிதம் எழுதினார். அதன் அடிப்படையில், 25 ஆண்டுகள் தள்ளி வைக்கப்பட்டது.அந்த அவகாசம் அடுத்த ஆண்டில் முடிகிறது. எனவே, அடுத்த ஆண்டு தொகுதி மறுவரையறை எப்படி செய்யப் போகின்றனர் என்ற, கேள்வி எழுந்துள்ளது. இது நியாயமான கேள்வி. தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகள் மட்டுமின்றி, பிற மாநில கட்சிகளும், இதை கோடிட்டுக் காட்டி உள்ளன.

848 இடங்கள்

தமிழகத்திற்கு இடங்கள் குறையாது என்கின்றனர். ஆனால், எத்தனை சதவீதம் ஏறும் என்று கேட்கிறோம். அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பார்லிமென்டில் எம்.பி.,க்கள் மொத்த எண்ணிக்கை, 848 இடங்களாக அதிகரிக்கப்பட்டால், உத்தரப் பிரதேசத்திற்கு, 80ல் இருந்து 143; பீஹாருக்கு 40ல் இருந்து 79; மத்தியப் பிரதேசத்திற்கு, 29ல் இருந்து 52 ஆக உயரும். அந்த அளவு தென் மாநிலங்களுக்கு உயராது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 43 )

S.jayaram
மார் 20, 2025 07:52

அதாவது தொகுதி சீரமைப்பு என்பது எந்த அடிப்படையில் நடக்கப் போகிறது. மக்கள் தொகை அதிகரிப்பால் நாட்டின் பொருளாதாரம் பாதிப்பதோடு, சுமையும் அதிகரிக்கிறது, எனவே குடும்பக் கட்டுப்பாட்டு திட்டத்தை அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்று கூறிய மத்திய காங்கிரஸ் அரசு மொழிப்பிரச்சினையில் சில மாநிலங்களுக்காக சொதப்பியது போலஓட்டுக்காக சில மதங்களுக்கும், சிலமானிலங்களுக்கும் கட்டாயப் படுத்தவில்லை, அதன் விளைவு வடமாநிலங்களில் குறிபிட்டமதத்தினரும், சிலமானிலங்களில் மக்கள் தொகையினை குறைக்கும் முயற்சியில் ஈடுபடவே இல்லை ஆனால் தென்னிந்தியாவில் தமிழ்நாடு, கேரள போன்ற மாநிலங்கள் மத்திய அரசின் கட்டளையை ஏற்று இங்கே குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தினை சிறப்பாக அமுல்படுத்தி யதால் மக்கள் தொகை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது இதன் விளைவு தென் மாநில ஜனத்தொகைக்கும் மக்கள் தொகையில் பெரிய வித்தியாசம் ஏற்பட்டது. எனவே இப்போது தொகுதி வரையறை செய்யும் போது மத்திய அரசின் கட்டளையை ஏற்று செயல்பட்டு மக்கதொகையினை குறைத்த மாநிலங்களுக்கு சிறப்பு அனுமதி அளித்து வட மாநிலங்களுக்கு நிகராக எண்ணிக்கை உயர்வை இந்தமானிலங்களுக்கு உயர்த்தி கொடுக்கவேண்டும். உப்பு க்கு 80 - 160 ஆனால் தமிழ்நாட்டிற்கு அதேளவை கடைபிடித்து 39 - டு 78 ஆக உயர்த்த வேண்டும். அதை தவிர்த்து தொகுதி எண்ணிக்கைகளை குறைத்தால், எதிர்காலத்தில் மத்திய அரசின் திட்டங்களை ஏற்பதில் பரிசீலனை செய்ய நேரிடும். இது கூட்டாட்சி தத்துவத்திற்கும், குடியுரிமைக்கும் எதிராக அமைந்து விடும் இது மத்தியஅரசு செயல்படும் விதத்தில் தான் உள்ளது.


நிக்கோல்தாம்சன்
மார் 19, 2025 20:55

வந்தேறிய பங்களாதேஸ் மக்களுக்கு வாக்குரிமை கிடைப்பதற்காக எவ்வளவு நாடகம் நாசர் சார் நடித்த அந்த கதாபாத்திரம் சரியான பொருத்தம் 24ம் பழி கேசு


Venkatesh
மார் 19, 2025 20:16

சூப்பர்..... 20 கட்சிகளும் சேர்ந்து தீர்மானம் போட்டு தொகுதி மறுசீரமைப்பை 100 ஆண்டுகள் ஒத்தி வைத்து...... இதைப் பரிசீலித்த பிஜேபி அரசை டிஸ்மிஸ் செய்ய தீர்மானம் நிறைவேற்றி அதை ஜால்ரா அடிக்கும் ஊடகங்கள் மூலம் பரப்பி கொண்டாடுங்கள்...... என்ன தான் பொழப்போ இதெல்லாம்


vbs manian
மார் 19, 2025 19:52

இப்போது இந்தியா மக்கள் தொகை 140 கோடி. 1971 தொகையை விட பலமடங்கு உயர்வு. புதிய கணக்கீடு வேண்டாமா.


பேசும் தமிழன்
மார் 19, 2025 18:38

நல்லது... அப்படியே ஹிந்தி தெரியாது போடா என்று t-shirt போட்டு கொண்டு போனால்.... நன்றாக இருக்கும்...... சுத்தம் விளங்கிடும்.


venkatan
மார் 19, 2025 18:19

அவ்வப்பொழுது எம்பிக்கள் செயல்பாடுகள்,தொகுதிகளின் வளர்ச்சி பற்றி ஆய்வு செய்து,தொகுதி மறு வரையறையை ஒத்திப்போடாமல் இருந்திருந்தால் இது வழக்கமான நடைமுறையாயிருக்கும்.தற்போது 3இலக்ஷம் மக்கள்தொகைக்கு 1எம்பி என நிர்ணயிக்கலாம்...கூடவே,கல்வித்தகுதி,குற்றமின்மைப் பின்னணி, சொத்து சேர்ப்பு போன்றவற்றை பரிந்துரைக்கலாம்.


எஸ் எஸ்
மார் 19, 2025 18:04

இந்த முதல்வர்கள் எல்லாம் வரும்வரை நிச்சயம் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஈகோ உண்டு


kantharvan
மார் 19, 2025 17:07

சரியான கருத்து?? அப்போ தொகுதி மறு வரையறை என்பதே தேவையில்லாத ஆணி??


Srinivasan Krishnamoorthy
மார் 19, 2025 17:42

whether dmk wants or not, this will happen, bjp will stay in power for 3 decades


Rajah
மார் 19, 2025 16:34

வடக்கில் தொகுதிகள் அதிகரித்தால் அது ஏன் காங்கிரஸ்க்கு அனுகூலமாக இருக்க முடியாது? அது திமுகவுக்கும் நல்லதுதானே? புள்ளிக் கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டுமென்றால் காங்கிரஸ் கட்சி கனிசமான தொகுதிகளை வடக்கில் வெல்ல வேண்டும். அது நடக்காத காரியம். ஆகவே தொகுதிகள் கூடினாலும் குறைந்தாலும் ஆட்சிக்கு வரப்போவது பாரதீய ஜனதா கட்சிதான். இந்த மகாநாடு காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாபெரும் அவமானம். தமிழகத்தின் தொகுதிகள் அதிகரிக்கப்பட்டால் பாராளமன்ற உணவத்தின் வருமானம் அதிகரிக்கும்.


Narayanan
மார் 19, 2025 14:35

முதலில் மக்கள் கணக்கெடுப்பு நடத்தினால்தான் எத்தனை தொகுதி அதிகரிக்கும் என்று தெரியும். மேலும் மக்களின் விகிதாசாரத்தில் எம் பிக்களின் எண்ணிக்கை அதிகரித்தால் என்ன பிரச்சனை? அந்த அந்த மாநிலங்கள் விரிவடையும்.நாடு வளம் பெறும். கட்சிகள் நாட்டுக்காகத்தானே தவிர தனி மனிதனின் விருப்பு வெறுப்புக்கு இல்லை. முதலில் முதல்வர்கள் வரவேண்டும் என்றார் ஸ்டாலின். அந்த கூட்டம் கூட்டமாக இருக்காது. சிலவுக்கணக்கும் குறைவாக எழுதவேண்டி இருக்கும். அதனால் இப்போது கட்சிகளையும் இணைக்க திட்டமிட்டு 20 கட்சிகளுக்கு கொண்டுவந்து பேசப்போகிறார் . தமாஷ்தான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை