உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விபத்தில் தீப்பிடித்த எலக்ட்ரிக் பஸ்; லாரி டிரைவர்களால் தப்பிய 21 பேர்

விபத்தில் தீப்பிடித்த எலக்ட்ரிக் பஸ்; லாரி டிரைவர்களால் தப்பிய 21 பேர்

கருமத்தம்பட்டி : கோவை அருகே நள்ளிரவில் மேம்பால தடுப்பு சுவரில் மோதிய எலக்ட்ரிக் பஸ் தீப்பிடித்து எரிந்து நாசமானது. பஸ்சுக்குள் சிக்கிய 21 பயணியரை, லாரி டிரைவர்கள் கண்ணாடியை உடைத்து உரிய நேரத்தில் மீட்டதால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.திருச்சியில் நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு புறப்பட்ட தனியார் எலக்ட்ரிக் பஸ், திருப்பூர், அவிநாசி வழியாக கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது. டிரைவர், கண்டக்டர் உட்பட, 26 பயணியர் இருந்தனர். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டை சேர்ந்த டிரைவர் பசுபதி, 29, பஸ்சை ஓட்டினார். அவிநாசி ரோட்டில், கருமத்தம்பட்டி அடுத்த தனியார் பள்ளி அருகே மேம்பாலத்தில் நள்ளிரவு, 2:30 மணிக்கு வந்தபோது, மேம்பால தடுப்பு சுவர் மீது பஸ் மோதி, தீப்பிடித்து எரிய துவங்கியது. பஸ்சின் முன்பக்கம் சேதமடைந்ததால், கதவை திறக்க முடியவில்லை. அந்த நேரம், அவ்வழியே சென்ற லாரி டிரைவர்களான விருதுநகர் மாவட்டம், திருச்சுழியை சேர்ந்த சபரிமலை, 29, ரமேஷ், 29 ஆகியோர் விபத்தை பார்த்து, உடனே பஸ் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து, பஸ்சுக்குள் தவித்த பயணியரை விரைவாக மீட்டனர்.தீப்பற்றிய பஸ்சில் இருந்து, பயணியர் அனைவரும் மீட்கப்பட்டதால், அவர்கள் தீக்காயமின்றி தப்பினர். இந்த தீ விபத்தில் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டதால், இரு லாரி டிரைவர்களையும் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்த போலீசார், அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து, கவுரவப்படுத்தினர்.அதே நேரம் பால தடுப்பு சுவரில் மோதியதில் காயமடைந்த பயணியர் 21 பேர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கருத்தம்பட்டி போலீசார் மற்றும் சூலுார் தீயணைப்பு படையினர் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

உண்மை கசக்கும்
ஜூன் 30, 2025 11:16

லாரி ஓட்டுனங்களுக்கு மிக்க நன்றிகள். பண உதவி செய்ய வேண்டும்.


Arjun
ஜூன் 30, 2025 10:02

கடவுளாக வந்து பயணிகளை காப்பாற்றிய ஓட்டுனர்களுக்கு நன்றி


Iyer
ஜூன் 30, 2025 08:34

நல்லவேளை - அது PETROL அல்லது DIESEL பஸ்ஸாக இருந்திருந்தால் பெரிய அபத்தம் நேரிட்டிருக்கும்.


நிக்கோல்தாம்சன்
ஜூன் 30, 2025 06:32

அந்த பேருந்துக்கு சர்டிபிகேட் கொடுத்த அதிகாரிகளை இன்னமும் கைது செய்ய சட்டத்தில் இடம் இல்லையா ?


Kalyanaraman
ஜூன் 30, 2025 10:18

நமது ஆண்மையற்ற முதுகெலும்பற்ற சட்டங்களால் பாமரனிடம்தான் அதிகாரத்தை காட்ட முடியும். அரசு ஊழியர்களிடம் கண்துடைப்புக்காக துறை ரீதியான நடவடிக்கை மட்டுமே. அதனால்தான் அரசு ஊழியர்கள் தவறையே தனது அன்றாட வேலையாக செய்து கொண்டிருக்கிறார்கள்.


Venkatesh
ஜூன் 30, 2025 16:09

இதுவே பிஜேபி அரசாங்கமாக இருந்தால் ஓட்டுநர் கைது செய்யப்படவேண்டும் என்று சொல்வாய் .. காலையில் எழுந்ததம் தி மு க அரசை குறை சொல்லாவிட்டால் உனக்கு ஜீரணம் ஆகாது போல ... அந்த அதிகாரிகள் அவாள்களாம் .. கைது செய்யலாமா.. ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை