இரண்டரை ஆண்டுகளில் 21 புலிகள் இறப்பு: முதுமலை காப்பக பாதுகாப்பு கேள்விக்குறி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
கூடலுார்:நீலகிரி மாவட்டத்தில், இரண்டரை ஆண்டுகளில், 21 புலிகள் பல்வேறு காரணங்களால் இறந்துள்ளன. புலிகள் இறப்பு அதிகரித்து வருவதால், முதுமலை காப்பகத்தில், புலிகள் வாழ்விடத்திற்கான பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது.நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், அதை ஒட்டிய பகுதிகளில், மசினகுடி, கூடலுார் மற்றும் நீலகிரி வனக்கோட்டம் ஆகியவை புலிகளின் முக்கிய வாழ்விடங்களாக உள்ளன.இங்கு, 2023 ஆக., செப்., மாதத்தில், ஆறு புலிக்குட்டிகள் உட்பட, 10 புலிகள் பல்வேறு பகுதிகளில் இறந்தன. இந்த குட்டிகளின் தாய்ப் புலிகள் நிலை குறித்து, இதுவரை தெளிவான தகவல் இல்லை. இவற்றை கண்டறிய பல்வேறு பகுதிகளிலும் கேமராக்களை வைத்தும் புலிகள் தென்படவில்லை. தொடர்ந்து, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகள் விசாரணை மேற்கொண்டன. இதில், 'ஆறு குட்டிகள் இயற்கையாக உயிரிழந்துள்ளன. புலிகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டை காரணமாக இரண்டு புலிகள் இறந்துள்ளன. இரண்டு புலிகள் விஷம் வைத்து கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 'இறந்த புலிக்குட்டிகளின் தாய்ப்புலிகள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை' என, கூறப்படுகிறது. 'தாய்ப் புலிகள் கொல்லப்பட்டு கடத்தப்பட்டதால், குட்டிகள் இறந்திருக்கலாம்' என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.இந்நிலையில், கடந்த ஆண்டு கூடலுார் வனக்கோட்டம், பிதர்காடு பகுதியில், விஷம் வைத்த பன்றியின் இறைச்சி உண்டு குட்டியுடன் புலி உயிரிழந்தது. செலுக்காடி அருகே, சுருக்கு கம்பியில் சிக்கி, 4 வயது ஆண் புலி உயிரிழந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய, ஆறு பேரை வனத்துறையினர், உடனடியாக கைது செய்தனர்.நடப்பாண்டு, முதுமலை நெலாக்கோட்டை வனச்சரகம் விலங்கூர் அருகே, மற்றொரு புலி தாக்கியதில் பிறந்து, ஏழு மாதமான புலிக்குட்டி ஜன., 20ல் உயிரிழந்தது. இதே வனச்சரகத்தில் பென்னை காப்பு காடு பகுதியில் மார்ச், 3ல், 5 வயது பெண் புலியும், மார்ச், 6ல், 10 வயது ஆண் புலியும் உயிரிழந்து கிடந்தன.நீலகிரி வனக்கோட்டம், நடுவட்டம் பகுதியில், 8 வயது ஆண் புலி இரு தினங்களுக்கு முன் உயிரிழந்தது. தொடர்ந்து, முதுமலை, மசினகுடி சீகூர் வனப்பகுதியில் நேற்று, 10 வயது ஆண் புலி இறந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடல் முழுதும் காயங்கள் இருந்ததால், உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்திருக்கலாம் என, வன கால்நடை மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.தடயவியல் ஆய்வுக்காக உடல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அதன் அறிக்கை வந்ததும் முழு விபரம் தெரிவிக்கப்படும் என்றும் கூறினர்.இதற்கிடையே, புலிகள் குறைந்த வயதில் இயற்கையாகவும், இயற்கைக்கு மாறாகவும் இறந்து வருவது அதிகரித்து வருவதால், இப்பகுதிகளில் புலிகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. 'ஒவ்வொரு முறையும் புலிகள் இறப்பின் போது, பிரேத பரிசோதனை செய்யும் வனத்துறையினர், 'அறிக்கை வந்தவுடன் இறப்புக்கான காரணம் கூறப்படும்' என, தெரிவிப்பதுடன், இறப்புக்கான முடிவுகளை வெளிப்படையாக அறிவிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.