உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  7 மாதங்களில் 22 புள்ளிமான்கள் பலி

 7 மாதங்களில் 22 புள்ளிமான்கள் பலி

திருநெல்வேலி: திருநெல்வேலி - - மதுரை நான்கு வழிச்சாலையில் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்திற்கு எதிரே வனத்துறையின் புள்ளி மான்கள் சரணாலயம் உள்ளது. கோடை காலங்களில் போதிய குடிநீர் இல்லாததாலும் காம்பவுண்ட் சுவர்கள் இடிந்து காணப்படுவதாலும் மான்கள் அங்கிருந்து உணவுக்காக வெளியேறி மானுார் சுற்று வட்டாரங்கள், அபிஷேகபட்டி வரையிலும் வருகின்றன. இதனால் வாகனங்களில் சிக்கி பலியாகின்றன. மான்கள் இறப்பு குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் முத்துராமன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்கு, வனத்துறை பதில் அளித்தது. அதில் கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரை 11 மான்கள் நாய்க்கடியிலும் மற்றும் 8 மான்கள் வாகன விபத்திலும் இறந்துள்ளன. மற்றவை நோயிலும் இறந்துள்ளன. கங்கைகொண்டான்-I பகுதி மட்டும் புள்ளிமான்கள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதனைச் சூழ்ந்துள்ள கங்கைகொண்டான்-II மற்றும் தாழையூத்து காப்புக்காடுகளில் 300க்கும் மேற்பட்ட மான்கள் வசிக்கின்றன. ஆனால், இப்பகுதிகள் சட்டப்பூர்வ பாதுகாப்பு பெறாததால், வனவிலங்குகள் அடிக்கடி விபத்துக்கும் வேட்டைக்கும் பலியாகின்றன. தொழிற்சாலைகள் அதிகரித்ததும், போக்குவரத்து நெரிசலும் மான்களின் வாழ்விடத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன. கங்கைகொண்டான்-II மற்றும் தாழையூத்து காப்புக்காடுகளையும் சரணாலயத்துடன் இணைக்குமாறு தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் 2023ல் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆனால் இதுவரை அதில் முன்னேற்றம் இல்லை. மத்திய, மாநில அரசுகள் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி புள்ளிமான்கள் சரணாலயத்துக்காக திட்டங்கள் அறிவித்திருந்தாலும், அவற்றை பாதுகாக்கும் நடவடிக்கையில் வனத்துறை அலட்சியம் காட்டி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இங்கு சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் தொழில் நிறுவனம் கங்கை கொண்டான் மான்கள் சரணாலயத்திற்கு கடந்த ஆண்டு ரூ.2 கோடி சி.எஸ்.ஆர்., நிதி தந்தது. அது இன்னும் பயன்படுத்தப்படாமல் உள்ளது. எனவே இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ