ராமேஸ்வரம் கோவிலில் 25,543 ஓலைச்சுவடிகள்
சென்னை : ''மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், 63 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன; அப்பணிகளை விரைந்து முடித்து, அடுத்தாண்டு டிசம்பருக்குள் குடமுழுக்கு நடத்தப்படும்,'' என, ஹிந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:தி.மு.க., - முத்துராமலிங்கம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் உள்ள, 300க்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளை பாதுகாத்து நவீனப்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்குமா? அமைச்சர் சேகர்பாபு: ராமேஸ்வரம் கோவிலில் இரு அறைகளில், 308 கட்டுகளில் இருந்து, 25,543 ஓலைச்சுவடிகள் கண்டறியப்பட்டன. அவற்றை பாதுகாக்க, ஆறு கட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. முதல்வர் ஆலோசனையின்படி, 1,584 கோவில்களில் ஓலைச்சுவடிகள் இருப்பு குறித்து கள ஆய்வு செய்யப்பட்டது. அதில், 52 கோவில்களில் சுருணை ஓலைகள், இலக்கிய ஓலைச்சுவடிகள், மருத்துவம் தொடர்பான குறிப்புகள் பொருந்திய ஓலைச்சுவடிகள், தங்க முலாம் பூசப்பட்ட ஏடுகள்.வெள்ளி, ஐம்பொன் பட்டயங்கள் என, 1.78 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆவணங்களை கண்டறியப்பட்டு, அவற்றை பிரித்து, ஆறு கட்டங்களாக ஆய்வு நடந்து வருகிறது. அ.தி.மு.க., - செல்லுார் ராஜு: உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், எப்போது குடமுழுக்கு நடத்தப்படும்; வீர வசந்தராயர் மண்டபம் எப்போது புதுப்பிக்கப்படும்? அதன் துணை கோவிலான செல்லுார் பகுதியில் இருக்கும் ஆப்பனுார் நாதர் கோவிலுக்கு எப்போது குடமுழுக்கு நடத்தப்படும்?சேகர்பாபு: வீர வசந்தராயர் மண்டபத்தில், 2018ல் ஏற்பட்ட தீ விபத்திற்கு பின், அப்போது இருந்த அரசால் நியமிக்கப்பட்ட குழு, அந்த மூன்று ஆண்டுகளில் சில பணிகளை மேற்கொண்டு இருந்தாலும், மண்டபத்திற்கு, 25 அடி நீளம் உடைய கற்துாண்கள் தேவைப்படுகின்றன. அதற்கு உண்டான கற்கள் ஒரே அளவில் கிடைப்பது சிரமமாக இருப்பதை, முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்ற உடன், தலைமை செயலர் தலைமையில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து, அந்த கற்களை எடுப்பதற்கு உண்டான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பின், 'டெண்டர்' கோரப்பட்டு, அந்த பணிகளும் நடந்து வருகின்றன. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை பொறுத்தவரை, 63 திருப்பணிகள் நடக்கின்றன. அதாவது, 40 பணிகள் உபயதாரர்களாலும், 23 திருப்பணிகள் கோவில் வாயிலாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அப்பணிகளை விரைந்து முடித்து, அடுத்தாண்டு டிசம்பருக்குள் குடமுழுக்கு நடத்தப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.