ரூ.1.15 கோடி சுருட்டல் கோவையில் 3 பேர் சிக்கினர்
சென்னை:சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டு இருப்பதாக மிரட்டல் விடுத்து, 'ஆன்லைன்' வாயிலாக, 1.15 கோடி ரூபாயை மோசடி செய்த, கோவையைச் சேர்ந்த மூன்று பேரை, சைபர் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த ஸ்ரீநிவாச வர்மா என்பவருக்கு, வாட்ஸாப் அழைப்பில், மும்பையில் இருந்து சைபர் குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரி என ஒருவர் பேசியுள்ளார். அப்போது, 'நீங்கள் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளீர்கள். இது தொடர்பாக, மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் இருந்து எங்களுக்கு உத்தரவு வந்துள்ளது. ஆதலால், உங்கள் மொபைல் போனில், 'ஜீரோ'வை அழுத்துங்கள்' என்று கூறியுள்ளார். அதன்படி செய்ததும், 'நீங்கள் டிஜிட்டல் முறையில் கைது செய்யப்பட்டுள்ளீர்கள். உங்களை விடுவிக்க, நாங்கள் தெரிவிக்கும், 'ஜிபே' எண்ணிற்கு பணம் அனுப்ப வேண்டும்' என்று மிரட்டி உள்ளனர். இதனால், ஆக., 24 முதல் 28ம் தேதி வரை, ஸ்ரீநிவாச வர்மா பல தவணைகளாக, 1.15 கோடி ரூபாய் அனுப்பி உள்ளார். இதுகுறித்து, 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு, மாநில சைபர் குற்றத்தடுப்பு பிரிவு போலீசாருக்கு புகார் அளித்துள்ளார். விசாரணையில், அந்த பணம் கோவையில் உள்ள, 'வின்பவர் எனர்ஜி சொல்யூஷன்' என்ற நிறுவனம் பெயரில் உள்ள, எஸ்.பி.ஐ., வங்கி கணக்கிற்கு சென்றுள்ளது. இதையடுத்து, மாநில சைபர் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார், அந்த நிறுவனத்தின் இயக்குனர்களான, கோவையைச் சேர்ந்த விஸ்வநாதன், 54, ஜெயராமன், 57, சுனில்குமார், 26, ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்; நேற்று கைது செய்யப்பட்டனர்.அவர்களின் வங்கி கணக்கில் இருந்த, 52 லட்சம் ரூபாயை, போலீசார் முடக்கி உள்ளனர்.