மேலும் செய்திகள்
'மாஜி' மகனை தொடர்ந்து பெண் உட்பட 2 பேர் கைது
27-Oct-2024
சென்னை : கொகைன் போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக, முன்னாள் டி.ஜி.பி.,யின் மகன் உள்ளிட்ட மூவரை, தனிப்படை போலீசார் கைது செய்தனர்.சென்னை பரங்கிமலை பகுதியில் நேற்று முன்தினம், போதையில் தள்ளாடியபடி நடந்து வந்த இருவரை மடக்கி தனிப்படை போலீசார் விசாரித்தனர். இருவரும், முடிச்சூரைச் சேர்ந்த அருண், 40, வியாசர்பாடியைச் சேர்ந்த மெக்கல்லன், 32, என்பதும், கொகைன் போதைப் பொருள் உட்கொண்டிருப்பதும் தெரியவந்தது.அவர்கள், அண்ணா நகரில் வசித்து வரும் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஜான் எரிக்சன், 45, என்பவரிடம் இருந்து, போதைப் பொருளை வாங்கியதாக கூறினர். அவர்கள் கொடுத்த தகவலின்படி, தனிப்படை போலீசார் ஜான் எரிக்சனை கைது செய்தனர். அவரிடம் இருந்த, 27,000 ரூபாய் மதிப்பிலான, 3 கிராம் கொகைன் போதைப் பொருள், ரொக்கமாக 1 லட்சம் ரூபாய், இரண்டு மொபைல் போன் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.இதுகுறித்து, பரங்கிமலை போலீசார் வழக்கு பதிந்து, மூவரையும் ஆலந்துார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் கைதான அருண், முன்னாள் டி.ஜி.பி., ரவீந்திரநாத்தின் மகன்.இவ்வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா, போதைப்பொருள் எங்கிருந்து வருகிறது என்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
27-Oct-2024