உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராணுவ நில குத்தகை ஒப்பந்தம் புதுப்பிக்க 30 நாள் அவகாசம்

ராணுவ நில குத்தகை ஒப்பந்தம் புதுப்பிக்க 30 நாள் அவகாசம்

சென்னை:சென்னை மற்றும் ஊட்டியில், கன்டோன்மென்ட் பகுதிகளில் உள்ள, ராணுவ நிலங்களின் குத்தகை தொடர்பான ஒப்பந்த காலத்தை மேலும் ஓராண்டு நீட்டிக்க, 30 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுதும், 17.99 லட்சம் ஏக்கர் நிலங்கள், ராணுவத்துக்கு சொந்தமானவையாக உள்ளன. இதில், 1.61 லட்சம் ஏக்கர் நிலங்கள், கன்டோன்மென்ட் நிர்வாகங்கள் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த நிலங்களை, குறுகிய மற்றும் நீண்ட கால குத்தகை அடிப்படையில், தனியாருக்கு கன்டோன்மென்ட் நிர்வாகங்கள் வழங்குகின்றன.குத்தகை பெற்றவர்கள், அதற்கான ஒப்பந்தங்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் புதுப்பிக்க வேண்டும். சென்னையில் பல்லாவரம் - பரங்கிமலை கன்டோன்மென்ட், ஊட்டி அடுத்த வெலிங்டன் கன்டோன்மென்ட் ஆகியவற்றில் உள்ள, ராணுவ நிலங்கள் குத்தகை தொடர்பாக, புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.அதில் கூறியிருப்பதாவது:ராணுவ நிலங்களின் குத்தகை ஒப்பந்தங்களுக்கான கால வரம்பை, மேலும் ஓராண்டு அல்லது ஒருங்கிணைந்த குத்தகை கொள்கை உருவாக்கப்படும் வரை, புதுப்பித்துக் கொள்ள ராணுவ அமைச்சகம் வாய்ப்பு வழங்கி உள்ளது.அறிவிப்பு வெளியானதில் இருந்து, 30 நாட்களுக்குள் குத்தகைதாரர்கள் அல்லது அவர்களின் சட்டப்பூர்வ வாரிசுதாரர்கள், உரிய ஆவணங்களை கன்டோன்மென்ட் அலுவலகங்களில் தாக்கல் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில், குத்தகை ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும். அதன்படி, கால அவகாசத்திற்குள் உரிய ஆவணங்களுடன் வராமல், குத்தகையை புதுப்பிக்காமல் ராணுவ நிலத்தை பயன்படுத்தக்கூடாது. குத்தகை உரிமையின்றி ராணுவ நிலத்தை அனுபவித்து வருவோர் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ