30 ஆண்டு குத்தகை பத்திரங்கள் ரெரா சான்றிதழ் தேவையில்லை
சென்னை:முப்பது ஆண்டுகள் வரையிலான குத்தகை பத்திரங்களை பதிவு செய்ய, 'ரெரா' எனப்படும் ரியல் எஸ்டேட் ஆணைய பதிவு சான்றிதழ் இனி தேவைஇல்லை. தமிழகத்தில், 5,381 சதுர அடி, அதற்கு மேற்பட்ட பரப்பளவில் மேற்கொள்ளப்படும் அனைத்து கட்டுமான திட்டங்களையும், ரியல் எஸ்டேட் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும். வீடு, மனை தொடர்பான விற்பனை பத்திரங்களை பதிவு செய்யும்போது, ரியல் எஸ்டேட் ஆணைய பதிவு இருக்கிறதா என்பது சரிபார்க்கப்படும். இதற்கான சான்று இல்லாவிட்டால், பத்திரம் பதிவுக்கு ஏற்கப்படாது.இதில், விற்பனை செய்யாமல் உரிமையாளர்களே பயன்படுத்தும் கட்டுமான திட்டம் என்றால், அது குறித்து ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும். இதன்படி 'விற்பனைக்கு அல்ல' என்று ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்ட கட்டடங்கள், முழுமையாக அல்லது பகுதியாக குத்தகை அடிப்படையில் வெளியார் பயன்பாட்டுக்கு அளிக்கப்படுகின்றன. இதுபோன்ற குத்தகை பத்திரங்களை பதிவு செய்யும்போது, ரியல் எஸ்டேட் ஆணைய பதிவு சான்றிதழ் கேட்க வேண்டுமா என்பது குறித்து, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. ஆனால், குத்தகை பத்திரங்களை பதிவு செய்யும்போது, ரியல் எஸ்டேட் ஆணைய பதிவு சான்றிதழ் வேண்டும் என, பதிவுத் துறையினர் கேட்கின்றனர். இதுகுறித்து, ரியல் எஸ்டேட் ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த விவகாரம் தொடர்பான ஒரு வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. அதில், குறைந்த கால குத்தகை பத்திரங்களை பதிய, ரியல் எஸ்டேட் ஆணைய பதிவு சான்றிதழ் அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, 30 ஆண்டுகளுக்கு உட்பட்ட குத்தகை பத்திரங்களை பதிவு செய்ய, ரியல் எஸ்டேட் ஆணைய பதிவு சான்றிதழ் வேண்டாம் என்பதில் தெளிவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தெரிவித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். இந்திய கட்டுமான வல்லுநர் சங்கத்தின் தென்னக மைய நிர்வாகி எஸ்.ராமபிரபு கூறியதாவது: உயர் நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில், ரியல் எஸ்டேட் ஆணையம் எடுத்துள்ள இந்த முடிவு வரவேற்கத்தக்கது. வீடுகள், கடைகள், அலுவலக கட்டடங்களை குத்தகை முறையில் பெறுவோருக்கு ஏற்பட்டு வந்த அலைக்கழிப்பு முடிவுக்கு வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.