65,000 இடங்களில் குற்றம் தடுக்க 3.2 லட்சம் சிசிடிவி
சென்னை: மாநிலம் முழுதும் பாதுகாப்பு குறைபாடு உள்ள, 65,000 இடங்களில், குற்றங்கள் நடக்க வாய்ப்பு இருப்பதாக, போலீசார் கண்டறிந்துள்ளனர். மாநிலம் முழுதும், 1,300க்கும் மேற்பட்ட காவல் நிலைய எல்லைகளில், பாதுகாப்பு குறைபாடு உள்ள பகுதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அந்த இடங்களில் ரோந்து போலீஸ் வாயிலாக, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இருள் சூழ்ந்த பகுதிகளாக இருந்தால் விளக்குள் பொருத்தவும், திருட்டு, செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றத்தில் ஈடுபடுவோர் எளிதில் தப்பிச் செல்லும் வகையில் இருந்தால், அந்த இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. அடிக்கடி குற்றம் நடக்கும் இடமாக இருந்தால், அதுபற்றி எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: முதற்கட்டமாக, 820 காவல் நிலையங்களில், 18 மாதங்கள் வரை காட்சிகளை சேமித்து வைக்கும் வகையில், 'சிசிடிவி' கேமராக்களை மேம்படுத்தும் பணிகள் நடக்கின்றன. அடுத்த கட்டமாக, மேலும், 251 காவல் நிலையங்களில் இப்பணிகள் நடக்க உள்ளன. அதேபோல, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதுகாப்பு குறைபாடு உள்ள பகுதிகள் ஆகவும், குற்றங்கள் நடக்க வாய்ப்புள்ள பகுதிகள் எனவும், 65,000 இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. அந்த இடங்களில், 3.2 லட்சம், 'சிசிடிவி'க்கள் பொருத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.