பொள்ளாச்சி:'சிட்டிங்' ஊராட்சித் தலைவரின் மகளை கடத்திய மூவர் கைது செய்யப்பட்டனர்; ஊராட்சி தலைவரின் மகள் மீதும், மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.பொள்ளாச்சி அடுத்த ஏரிபட்டி ஊராட்சி 'சிட்டிங்' தலைவர் மனோகரனின் மகள் வர்ஷினி, 29. நேற்று முன்தினம் மதியம், பொள்ளாச்சி - உடுமலை சாலையிலுள்ள தபால் நிலையம் அருகே, இனோவா (டிஎன்41 டி 8488) காரில் சென்று கொண்டிருந்தார். இவ்வழியாக சென்ற மூவர், காரை மறித்து, டிரைவர் முருகனை தள்ளி விட்டு, காருடன் வர்ஷினியை கடத்திச் சென்றனர்.கிழக்கு போலீசில், முருகன் அளித்த புகாரின் படி, போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மடத்துக்குளம் அருகே சோதனைச் சாவடிக்கு, கார் வந்த போது, இவர்களை கைது செய்த போலீசார், வர்ஷினியை மீட்டனர். விசாரணையில், வர்ஷினியை கடத்திச் சென்றவர்கள், மதுரை கப்பலூரை சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி இயக்குனர் தனவேல், 39, விரிவுரையாளர்கள் ஜான் பாஷா, 32, வெங்கடேசன், 21, என்பது தெரிந்தது.பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்மாதுரை கூறியதாவது:வர்ஷினி, மதுரையிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு, பெங்களூரு, கோவை உள்ளிட்ட இடங்களில் சாப்ட்வேர் நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகவும், மாணவர்களிடமிருந்து பணம் பெற்றுத் தர வேண்டும் எனவும், கல்லூரி நிர்வாகத்திடம் கூறியுள்ளார். மாணவர்கள் 35 பேரிடமிருந்து தலா 35 ஆயிரம் வீதம், 12.25 லட்சம் வசூலித்து தரப்பட்டுள்ளது. இரு மாதங்களுக்கு முன், பொள்ளாச்சியை சேர்ந்த சேகர், மணிவாசகம் ஆகியோர், மாணவர்களிடம் வளாகத் தேர்வு நடத்தியுள்ளனர்.முடிவுகளை தெரிவிக்காததால், சந்தேகமடைந்த கல்லூரி நிர்வாகத்தினர், வர்ஷினியிடம் பணம் கேட்டதற்கு, இழுத்தடித்து வந்துள்ளார். நேற்று (நேற்று முன்தினம்) கல்லூரி நிர்வாகத்தினர் பணம் கேட்டதற்கு, பொள்ளாச்சிக்கு வரச் சொல்லியுள்ளார். ஆனால், பணம் தராமல் சமாதானம் பேசியதால், பணம் பெற வந்தவர்கள், வர்ஷினியை கடத்தினர். இவர் மீட்கப்பட்டு, மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தனவேல் அளித்த புகாரின் படி, வர்ஷினி, சேகர், மணிவாசகம் ஆகியோர் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, இன்ஸ்பெக்டர் அம்மாதுரை கூறினார்.