உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  கோல்ட்ரிப் மருந்து தயாரிப்பில் 364 பாதுகாப்பு விதிமீறல்கள்

 கோல்ட்ரிப் மருந்து தயாரிப்பில் 364 பாதுகாப்பு விதிமீறல்கள்

சென்னை: 'கோல்ட்ரிப்' மருந்து தயாரிப்பில், 364 பாதுகாப்பு விதிமீறல்கள் இருந்தது, மருந்து கட்டுப்பாட்டு விசாரணையில் தெரிய வந்துள்ளது. மத்திய பிரதேசத்தில், 'கோல்ட்ரிப்' இருமல் மருந்தை உட்கொண்ட 22 குழந்தைகள் உயிரிழந்தன. அதைத் தொடர்ந்து, அம்மருந்தை தயாரித்த காஞ்சிபுரத்தை சேர்ந்த, ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதற்கிடையே, அந்நிறுவனத்தில் இருந்த மருந்துகளை, பகுப்பாய்வு செய்ததில், அதில் 'டை எத்திலீன் கிளைகால்' என்ற ரசாயன நச்சு இருப்பது கண்டறியப்பட்டது. இவை, ஆயில், பெயின்ட், மை தயாரிக்கும்போது அதனை திரவமாக மாற்ற பயன்படுத்தப்படும் கரைப்பான் சேர்மமாகும். திரவ மருந்துகளில், 'புரோபலின் கிளைகால்' சேர்மம்தான் கரைப்பானாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால், கோல்ட்ரிப் மருந்தில், 'டை எத்திலீன் கிளைகால்' சேர்மம் கலந்திருந்தது கண்டறியப்பட்டது. இது குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், இம்மருந்தால் பாதிக்கப்பட்டு, மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, 5 வயது குழந்தை, 114 நாட்களுக்கு பின் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிஉள்ளது. அதேநேரம், அக்குழந்தைக்கு பார்வையிழப்பு மற்றும் இயக்க குறைபாடு ஏற்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் நடத்திய விசாரணையில், 'கோல்ட்ரிப்' மருந்து தயாரிப்பின்போது, 364 விதிமீறல்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளன. அதில் 39 விதிமீறல்கள், பாதுகாப்பு சார்ந்த முக்கிய அம்சங்கள்; அதை அந்நிறுவனம் கடைப்பிடிக்கவில்லை என, தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை