| ADDED : பிப் 24, 2024 06:46 AM
திருபுவனை : திருபுவனையில் உள்ள தனியார் கம்பெனியில் செக்யூரிட்டியாக பணிபுரியும் பிஸ்வேஸ்வர்ஜனா, 42; என்பவரிடம் நேற்று முன்தினம் மூன்று பேர் கத்தியை காட்டி மிரட்டி மொபைல் போனை பறித்துச் சென்றனர். புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.இந்நிலையில் இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன், சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு திருபுவனை அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியே பைக்கில் வந்த மூவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அவர்கள் விழுப்புரம் மாவட்டம், பரிசுரெட்டிபாளையம் சிவனு மகன் ராம்பிரசாத் 20; வினாயகபுரம், ஒத்தவாடி தெரு வேலாயுதம் மகன் ராஜவேல், 19; மதகடிப்பட்டு புதிய காலனி நாகப்பன் மகன் வசந்த் 19; என்பதும், இவர்கள் கடந்த மூன்று மாதங்களாக திருபுவனை, மதகடிப்பட்டு, திருவாண்டார்கோவில், திருபுவனை பிப்டிக் தொழிற்பேட்டை, திருக்கனுார் சாலை, மடுகரை சாலை உட்பட பல இடங்களில் இரவில் நடந்து மற்றும் வாகனங்களில் செல்வோரை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி பணம், நகை, மொபைல் போன்களை வழிப்பறி செய்து வந்ததும், அந்த போன்களை மதகடிப்பட்டு வாட்ச் மற்றும் மொபைல் போன் பழுதுநீக்கும் கடை நடத்தி வரும் அதே பகுதியை சேர்ந்த சுந்தரம், 37; என்பவரிடம் விற்றது தெரிய வந்தது.அதன்பேரில் வழிப்பறி ஆசாமிகள் ராம்பிரசாத், ராஜவேல், வசந்த் மற்றும் திருட்டு மொபைல் போன்களை வாங்கிய சுந்தரம் ஆகியோரை கைது செய்தனர். மேலும், சுந்தரத்திடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள 14 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். பின்னர் நால்வரையும் புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.