உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை அருகே வெளிமாநில தொழிலாளர்கள் 4 பேருக்கு அடி

சென்னை அருகே வெளிமாநில தொழிலாளர்கள் 4 பேருக்கு அடி

கொல்கட்டா:சென்னை அருகே பணியாற்றிய மேற்கு வங்க தொழிலாளர்கள் 4 பேரை அப்பகுதியினர் வங்க தேசத்தவர் என்ற சந்தேகத்தில் அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாதை சேர்ந்தவர்கள் சுஜன் ஷேக், அவரது சகோதரர் மிலன் ஷேக். மேலும் அதே பகுதியை சேர்ந்த சஹில் ஷேக், பாபு ஷேக் ஆகிய நான்கு இளைஞர்களும் சில நாட்களுக்கு முன் வேலை தேடி தமிழகம் வந்தனர். அவர்கள் சென்னை அருகே திருவள்ளூரில் தங்கி கட்டு மான பணி செய்தனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த சிலர் புலம்பெயர் தொழிலாளர்களான மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்களிடம் நீங்கள் யார், எங்கிருந்து வந்துள்ளீர்கள் என கேட்டனர். அவர்கள் வங்கமொழியில் பேசியதும் வங்கதேசத்தினர் என சந்தேகம் அடைந்து இரும்பு கம்பிகள் மற்றும் கம்புகளால் சரமாரியாக நான்கு தொழிலாளர்களையும் தாக்கியுள்ளனர். இதில் சுஜனுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தங்களை தாக்கியது குறித்து மேற்கு வங்க தொழிலாளர்கள் சென்னை போலீசில் ஜூலை 15ல் புகார் அளித்தனர். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டினர். இதையடுத்து சொந்த ஊரான முர்ஷிதாபாத் சென்று அங்குள்ள போலீசில் கடந்த 18ல் அவர்கள் புகார் அளித்தனர். அதில் தங்களை வங்கதேசத்தினர் என்ற சந்தேகத்தில் உள்ளூர் மக்கள் தாக்கியதுடன், வேலை பார்த்த இடத்தில் 11 நாள் சம்பளமும் தரவில்லை என குறிப்பிட்டிருந்தனர். இது தொடர்பான புகாரை பெற்ற முர்ஷிதாபாத் போலீசார் திருவள்ளூர் போலீசை தொடர்பு கொண்டு விசாரித்தனர். தமிழகம் முழுதும் சட்டவிரோதமாக தங்கியுள்ள நம் அண்டைநாட்டை சேர்ந்த வங்கதேசத்தினரை கைது செய்யும் நிலையில் மேற்கு வங்கத்தினரை திருவள்ளூரில் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ