உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிரீன் காரிடார் - 3 திட்டத்தில் 400 கிலோ வோல்ட் வழித்தடங்கள்

கிரீன் காரிடார் - 3 திட்டத்தில் 400 கிலோ வோல்ட் வழித்தடங்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில், 'கிரீன் காரிடார் - 3' எனப்படும், பசுமை மின் வழித்தட மூன்றாம் கட்ட திட்டத்தில், பசுமை மின்சாரத்தை எடுத்துச் செல்ல, 400 கிலோ வோல்ட் திறனில், மின் வழித்தடங்கள் அமைக்க முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.தமிழகத்தில் காற்றாலை, சூரியசக்தி மின் நிலையம் அமைக்க சாதகமான சூழல் நிலவுகிறது. எனவே, தனியார் நிறுவனங்கள் அமைக்கும் பசுமை மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் பணியில் மின்வாரியம் ஈடுபட்டுள்ளது.இதற்காக, ஜெர்மனியின் கே.எப்.டபிள்யூ., வங்கி உதவியுடன், கிரீன் காரிடார் திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்துகிறது. கிரீன் காரிடார் - 1 திட்டத்தில், 1,100 கோடி ரூபாய் செலவில், திண்டுக்கல் மாவட்டம் தென்னம்பட்டியில், 400 கிலோ வோல்ட் துணைமின் நிலையமும்; தென்னம்பட்டி முதல் துாத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வரை, 400 கி.வோ., வரை இரட்டை சுற்று மின் வழித்தடமும் அமைக்கப்பட்டுஉள்ளன. கிரீன் காரிடார் - 2 திட்டத்தின் கீழ், 1,006 கோடி ரூபாயில், திருநெல்வேலி சமூகரெங்கபுரத்தில், 400 கி.வோ., துணைமின் நிலையம் அமைக்கப்படுகிறது.மேலும், திருப்பூரில் உள்ள பூளவாடி, கொங்கல் நகர், கன்னியாகுமரி முப்பந்தலில் தலா, 230 கி.வோ., திறனில் துணைமின் நிலையங்களும், அவற்றை இணைக்க அதே திறனில் வழித்தடங்களும் அமைக்கப்படுகின்றன. தற்போது, கிரீன் காரிடார் - 3 திட்டத்தை செயல்படுத்த மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ள நிலையில், மின்வழித்தடங்களுக்கு தான் முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.இதுகுறித்து, மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:தென்மாவட்டங்களில் காற்றாலை, சூரியசக்தி மின் நிலையங்கள் அதிகம் அமைக்கப்பட்டு வருகின்றன. துணைமின் நிலையங்கள் தேவையான அளவில் உள்ளன.எனவே, கிரீன் காரிடார் - 3 திட்டத்தில் துாத்துக்குடியில், 400 கிலோ வோல்ட் திறனில் ஒரு துணைமின் நிலையம் அமைக்கப்பட உள்ளது.மற்றபடி, ஏற்கனவே உள்ள துணைமின் நிலையங்களுக்கு அதிக மின்சாரம் எடுத்து செல்லும் வகையில், 400 கி.வோ., மின்வழித்தடங்கள் அமைக்கப்பட உள்ளன.இதற்காக, கன்னியாகுமரி, துாத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங் களில் இடங்கள் தேர்வு செய்யப்பட உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி, 11,361 மெகாவாட் திறனில் காற்றாலை, 10,000 மெகாவாட் திறனில் சூரியசக்தி மின் நிலையங்கள் உள்ளன. மொத்த காற்றாலையில், 2,030 மெகாவாட் உற்பத்தி செய்யும் ஆலைகள் மட்டும், பிற மாநிலங்களுக்கு செல்லும் மத்திய மின் வழித்தடத்தில் இணைக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி