கோவை: கோவை இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர் அடித்து கொல்லப்பட்டது தொடர்பாக, சக மாணவர்கள் ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். கோவை, மலுமிச்சம்பட்டியில் உள்ள ஹிந்துஸ்தான் இன்ஜினியரிங் கல்லுாரி மூன்றாமாண்டு மாணவர் அமுதன், 19, கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர். இவர், கல்லுாரி அருகே அம்பாள் நகரில், சக மாணவர்களின் அறையில் தங்கியிருந்தார். தகாத வார்த்தை கடந்த 10ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு, தன் நண்பனை தகாத வார்த்தையில் பேசியதற்காக, அமுதன் உள்ளிட்ட ஆறு பேர், ஒத்தக்கால்மண்டபத்தில் சக மாணவர்கள் தங்கியிருந்த வீட்டுக்கு சென்று தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அதில், அமுதனை மட்டும் அடையாளம் கண்ட எதிர் தரப்பினர், காலை 8:00 மணியளவில் கல்லுாரிக்கு பின்புறம் உள்ள மைதானத்துக்கு அழைத்து சென்று தாக்கினர். பின்னர், தாக்கிய மாணவர்களே பைக்கில் அழைத்து சென்று, அவர் தங்கியுள்ள அறையில் இறக்கி விட்டுள்ளனர். மதியம் 2:00 மணிக்கு மேல் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அமுதன், 3:00 மணியளவில் உயிரிழந்தார். செட்டிப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். மாணவர் கொலை தொடர்பாக, சக மாணவர்களான கடலுாரைச் சேர்ந்த ஆராமுதன், 20, சிவகங்கை அரவிந்த், 21, திருவாரூர் சிவா ரோஹித், 20, பெரம்பலுார் மணி பாலு, 20, மற்றும் திருவள்ளூரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். போதைப்பொருள் போதைப்பொருள் பயன்படுத்தியவர்கள் குறித்து விபரம் அளித்ததால் தான், மாணவர் அமுதன் அடித்து கொல்லப்பட்டதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்தனர். போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இவ்வழக்கில் ஐந்து பேர் அடையாளம் காணப்பட்டு, இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். 'மேலும், ஒன்பது பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் பயன்பாடு குறித்த குற்றச்சாட்டு உண்மையல்ல. 'முதலில் தாக்குதலில் ஈடுபட்டது, அமுதன் குழுவினர்; அதற்கான பதில் தாக்குதலில் சீனியர் மாணவர்கள் ஈடுபட்டபோது, அசம்பாவிதம் நடந்து உள்ளது. 'இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கேமரா பதிவுகளை சேகரித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்' என்றார்.
கல்லுாரியில் 'சஸ்பெண்ட்'
கல்லுாரி நிர்வாகம் தரப்பில் முதல்வர் ஜெயா மற்றும் டீன்கள் மகுடேஸ்வரன், ஆனந்தமூர்த்தி அளித்த பேட்டி: ஜூலை 21 இரவு 11:30 மணியளவில், இன்ஜி., மூன்றாம் ஆண்டு மாணவர்களான அமுதன், அஜீஷ் ஆகிய இருவரும் விடுதி விதிமுறைகளை மீறி வெளியே வந்துள்ளனர். அப்போது, விடுதி சமையல் ஊழியர் ஒருவர், 'இந்நேரத்தில் ஏன் வெளியே வந்துள்ளீர்கள்?' என கேட்டதற்கு, அவரை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த சமையல் ஊழியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விசாரணையில், தங்கள் தவறை மாணவர்கள் இருவரும் ஒப்புக்கொண்டனர். இதற்கான ஒழுங்கு நடவடிக்கையாக, இரு மாணவர்களையும் ஆக., 10 வரை 'சஸ்பெண்ட்' செய்திருந்தோம். விடுதியில் தங்க அனுமதிக்காததால், பெற்றோரை அழைத்து செல்ல கூறியிருந்தோம். இந்நிலையில், ஆக., 10ம் தேதி மாணவர் அமுதன் தாக்கப்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிரிழந்த தகவல் எங்களுக்கு கிடைத்தது. விசாரணையில், போலீசாருக்கு முழு ஒத்துழைப்பை அளித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.