பாரத எழுத்தறிவு திட்டத்தில் 5 லட்சம் பேர் தேர்வெழுதினர்
சென்னை ; பள்ளிக்கல்வி துறையின் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில் நடத்தப்படும், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில், ஐந்து லட்சம் பேர் நேற்று தேர்வு எழுதினர்.தமிழகத்தை, 2025ம் ஆண்டுக்குள் முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக்கும் வகையில், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தை, தமிழக அரசு 2022 முதல் செயல்படுத்துகிறது.பள்ளிக்கல்வி துறையின், பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில், மாநிலத்தில் உள்ள எழுத, படிக்க தெரியாத, 15 வயதுக்கும் மேற்பட்ட, 6.14 லட்சம் பேர் கண்டறியப்பட்டனர்.சேலத்தில் மட்டும், 30,000க்கும் அதிகமானோர் கண்டறியப்பட்டனர். கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, ஈரோடு, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும், படிப்பறிவு இல்லாதவர்கள் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு தன்னார்வலர்கள் வாயிலாக, 200 மணி நேரம் கல்வி கற்பிக்கப்படுகிறது. அதாவது, தமிழ் எழுத்துகள், எண்கள், ஆதார், மொபைல் போன் எண்களை ஞாபகம் வைப்பது, எழுதி வைப்பது, ரேஷன் கார்டு, ஏ.டி.எம்., கார்டுகளை பயன்படுத்துவது, வங்கிகள், தபால் நிலையங்களின் நடைமுறைகளை அறிந்து பயனாளியாவது உள்ளிட்ட விஷயங்கள் களப்பணி வாயிலாக கற்பிக்கப்படுகின்றன.கல்வி கற்போருக்கு, ஆண்டுக்கு இரண்டு முறை தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில், தமிழகம் முழுதும் 30,113 மையங்களில் நேற்று நடந்த, 'புதிய பாரத எழுத்தறிவு' தேர்வை, 5.09 லட்சம் பேர் எழுதினர். மீதமுள்ளோர், வரும் மார்ச்சில் நடக்கும் தேர்வில் பங்கேற்பர்.