50 செயற்பொறியாளர் பணியிடங்கள் காலி; நீர்வளத்துறையில் சிக்கல்
சென்னை : நீர்வளத்துறையில், 50 செயற்பொறியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.நீர்வளத்துறையில், சென்னை, கோவை, திருச்சி, மதுரை என, நான்கு மண்டலங்கள் உள்ளன. இவற்றின் வாயிலாக, அணைகள், ஆறுகள், ஏரிகள், கால்வாய்கள் பராமரிப்பு, கதவணைகள், தடுப்பணைகள் கட்டுமானம், ரெகுலேட்டர்கள், ஷட்டர்கள் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வெள்ள பாதுகாப்பு, கடல் அரிப்பு தடுப்பு பணிகளும் நடக்கின்றன.இப்பணிகளுக்கு மாநில அரசு மட்டுமின்றி, மத்திய அரசு வாயிலாகவும் நிதி வழங்கப்படுகிறது. உலக வங்கி, ஜெர்மன் வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, நபார்டு வங்கி உள்ளிட்டவை வாயிலாக கடனுதவி வழங்கப்படுகிறது. தமிழக அரசின் நடப்பாண்டு பட்ஜெட்டில், நீர்வளத்துறைக்கு 9,460 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.இந்நிதியில், பல்வேறு பணிகளை மேற்கொள்வது தொடர்பாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. இவற்றுக்கு செயல்வடிவம் கொடுக்க, திட்ட மதிப்பீடு தயாரித்தல், நிர்வாக ஒப்புதல் பெறுதல், ஒப்பந்ததாரர் தேர்வு உள்ளிட்ட பணிகளை செய்ய வேண்டும். இப்பணிகளை, கண்காணிப்பு பொறியாளர்கள் மற்றும் செயற்பொறியாளர்கள் தான் செய்வர்.ஆனால், மாநிலம் முழுதும், 50 செயற்பொறியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. உதவி செயற்பொறியாளர்களுக்கு பதவி உயர்வு அளித்து, இப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாததால், திட்டங்களை செயலாக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.