உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டெங்கு காய்ச்சலால் தினம் 50 பேர் பாதிப்பு

டெங்கு காய்ச்சலால் தினம் 50 பேர் பாதிப்பு

சென்னை:மழை மற்றும் வெயில் காரணமாக, 'ஏடிஸ்' வகை கொசு இனப்பெருக்கம் அதிகரித்து, தினமும் 50 பேர் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருவதாக, பொது சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.தமிழகத்தில் பரவலாக மழை மற்றும் வெயில் என, வானிலை மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக, மாநிலம் முழுதும் பரவலாக டெங்கு காய்ச்சலை பரப்பும், 'ஏடிஸ் - ஏஜிப்டி' வகை கொசுக்கள் அதிகரித்து காணப்படுகின்றன.இதனால், தினமும் 50க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் குணமடைந்தாலும், ஓரிருவர் உயிரிழந்து வருகின்றனர். அதன்படி, ஆறு மாதங்களில், 8,035 பேர் வரை பாதிக்கப்பட்டு, ஐந்து பேர் வரை உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:திறந்தவெளி இடங்கள், நீண்ட காலமாக கிடக்கும் பொருட்கள், வாகனங்கள் உள்ளிட்டவற்றில், கொசுக்கள் முட்டையிட்டு இருக்கும். கண்ணுக்கே தெரியாத அம்முட்டைகள் பல ஆண்டுகள் அழியாது. அதேநேரம், முட்டை இருக்கும் பகுதியில் மழைநீர் போன்ற நன்னீர் சில நாட்கள் வரை தேங்கும்போது, அவை கொசுப் புழுக்களாக உருவாகி, 'ஏடிஸ்' கொசுவாக மாறும்.இவ்வாறு உருவாகும் சில வகை கொசுக்களுக்கு, டெங்கு காய்ச்சலை பரப்பும் தன்மை இயற்கையாகவே இருக்கும். அதனால் தான், மழை மற்றும் வெயில் மாறி மாறி காணப்படும் தென் மேற்கு பருவ மழை காலங்களில், டெங்கு பாதிப்பு அதிகரிக்கிறது.இந்த பாதிப்பு, வருங்காலங்களில் மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது. எனவே, வீடுகள், சுற்றுப்புறங்களில் மழைநீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்வதன் வாயிலாக, டெங்கு பாதிப்பில் இருந்து தப்ப முடியும்.அதேநேரம், காய்ச்சல், சளி பாதிப்பு இருந்தால், அலட்சியம் காட்டாமல் சிகிச்சை பெறுவதும் அவசியம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ