சட்டசபை தேர்தலுக்கு 500 தனியார் பஸ்கள் தயார்
சென்னை: சட்டசபை தேர்தலில் ஓட்டளிக்க, மக்கள் தடையின்றி ஊர்களுக்கு செல்ல வசதியாக, 500 தனியார் பஸ்களை இயக்க, அரசு போக்குவரத்துக் கழகங்கள் ஏற்பாடு செய்துஉள்ளன. தமிழகத்தில் வரும் 23ல் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி, வரும் 21, 22, 23ம் தேதி பகல் வரை, சென்னையில் இருந்து தினமும் இயக்கக் கூடிய 2,092 பஸ்களுடன், 5,574 சிறப்பு பஸ்கள் என, மூன்று நாட்களுக்கு மொத்தமாக, 10,663 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இது தவிர, அரசு போக்குவரத்துக் கழகத்தின் கீழ், ஏற்கனவே போடப்பட்டுள்ள ஒப்பந்த அடிப்படையில், 500 தனியார் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இது குறித்து, தமிழ்நாடு தனியார் பஸ் உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது: சட்டசபை தேர்தலையொட்டி, வெளியூர்களில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து வெளியூர்களுக்கும் முக்கிய வழித்தடங்களில், 500 தனியார் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. ஏற்கனவே போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் கீழ், 1 கி.மீ.,க்கு 52.50 ரூபாய் கட்டணத்தில் இயக்க உள்ளோம். மொத்த கி.மீ., துாரத்தை கணக்கீடு செய்து, அரசு போக்குவரத்துக் கழகங்கள், எங்களுக்கான தொகை வழங்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.