இடைத்தரகர் தலையீடு இல்லாததால் 54 லட்சம் பேல் பருத்தி விற்பனை
திருப்பூர்,:பருத்தி ஆண்டு துவங்கிய பின், கடந்த சில ஆண்டுகளில் இல்லாத வகையில், கடந்த ஒரே மாதத்தில் 54.58 லட்சம் பேல் பஞ்சு விற்பனைக்கு வந்துள்ளது.நடப்பு பருத்தியாண்டில் அறுவடை துவங்கியதும் முதல் தர பஞ்சு வரத்து துவங்கியிருப்பதால், நுாற்பாலைகளும், வியாபாரிகளும் கொள்முதல் செய்ய துவங்கிவிட்டனர். இடைத்தரகர் தலையீடு இல்லாததால், பஞ்சு இருப்பு வைப்பது தவிர்க்கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களாக தினசரி பஞ்சு வரத்து, இரண்டு லட்சம் 'பேல்' ஆக இருக்கிறது. ஒரு பேல் என்பது, 170 கிலோ. நுாற்பாலைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய ஏதுவாக, இந்திய பருத்திக் கழகமும், முதல் தர பஞ்சு பேல்களை கொள்முதல் செய்து, விற்பனைக்காக இருப்பு வைத்துள்ளது.கடந்த பருத்தி சீசனில், மொத்தம், 322.66 லட்சம் பேல் பஞ்சு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக, 2024 ஜன., மாதம், 50.09 லட்சம் பேல் பஞ்சு விற்பனைக்கு வந்திருந்தது. கடந்த ஆண்டை மிஞ்சும் அளவுக்கு, டிச., மாதத்தில் மட்டும், 54.58 லட்சம் பேல் பஞ்சு விற்பனைக்கு வந்துள்ளது. 2023 அக்., - நவ., மற்றும் டிச., ஆகிய மூன்று மாத பஞ்சு வரத்து, 90.95 லட்சம் பேல்களாக இருந்தது. கடந்த, 2024 அக்., முதல் டிச., வரையிலான மூன்று மாதங்களில், 110 லட்சம் பேல் பஞ்சு விற்கப்பட்டுள்ளதாக, இந்திய பருத்தி சங்க அறிக்கையில் தெரிய வந்து உள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷன் தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் கூறுகையில், ''கடந்தாண்டு முழுதும், பஞ்சு விலை சீராக இருந்தது. இந்தாண்டும் பெரிய மாறுதல் ஏற்பட வாய்ப்பில்லை. இதனால், அறுவடையான பருத்தி, உடனுக்குடன் விற்பனைக்கு வருகிறது. ''நுாற்பாலைகளுக்கு தட்டுப்பாடின்றி பஞ்சு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், இந்திய பருத்திக் கழகம், அதிகளவு பஞ்சு வாங்கி, இருப்பு வைத்துள்ளது. முதல் தர பஞ்சு வாங்க, நுாற்பாலைகளும், வியாபாரிகளும் ஆர்வமாக இருக்கின்றனர்,'' என்றார்.