அரசு பள்ளிகளில் 60 ஆயிரம் சத்துணவு ஊழியர்கள் பணியிடங்கள் காலி பல மையங்களில் ஒருவர் பணியாற்றும் அவலம்
மதுரை : அரசு பள்ளிகளில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சத்துணவு மையங்களில் ஊழியர்கள் பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாக கிடப்பதால் ஒரே ஊழியர் பல மையங்களை கவனிக்கும் அவல நிலை தொடர்வதாக சர்ச்சை எழுந்துள்ளது.தமிழகத்தில் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதற்காக 43 ஆயிரம் சத்துணவு மையங்கள் செயல்படுகின்றன. ஒரு மையத்தில் தலா ஒரு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் பணியில் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியிடம் காலியாக உள்ளன. குறிப்பாக 90 சதவீதம் மையங்களில் உதவியாளர் பணியிடங்கள் இல்லை. 3 அல்லது 4 மையங்களுக்கு ஒரு சமையலர், பல இடங்களில் 7 மையங்களுக்கு ஒரு சத்துணவு அமைப்பாளர் என்ற நிலையில் தான் தற்போது பணியாற்றுகின்றனர். இதனால் பணிச்சுமையில் தவிக்கின்றனர்.தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் நுார்ஜஹான் கூறியதாவது:தமிழகத்தில் 2017 முதல் சத்துணவு மையங்களில் ஊழியர்கள் நியமனம் இல்லை. இதனால் 1.25 லட்சம் பேர் பணியில் இருந்த நிலையில் தற்போது 65 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர். பல ஆண்டுகளாக காலியாக உள்ள 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகிறோம். இதையடுத்து 8997 பணியிடங்கள் ரூ. 3 ஆயிரம் தொகுப்பூதியம் அடிப்படையில் நிரப்பப்படும் என அரசு அறிவித்தது. பணியில் உள்ள ஊழியர்கள் பலரை காலமுறை சம்பளத்திற்கு மாற்ற வேண்டும் என போராடி வரும் நிலையில், தொகுப்பூதியம் அடிப்படையில் அறிவித்தது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் எங்கள் போராட்டம் தொடர்கிறது. ஊழியர் பற்றாக்குறையால் கடும் மன உளைச்சலில் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு இதற்கு தீர்வுகாண வேண்டும் என்றார்.