தமிழகம் முழுதும் 35,000 விநாயகர் சிலைகளுக்கு 65,000 போலீசார் பாதுகாப்பு
சென்னை:நாடு முழுதும் விநாயகர் சதுர்த்தி விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் உள்ள கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தன. வீடுகளில், மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு, அலங்காரம் செய்து, மக்கள் வழிபட்டனர். விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, ஹிந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள், உயர் நீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றி, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்து வருகின்றனர். போலீசாரின் அனுமதியுடன், மாநிலம் முழுதும், 35,000 விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு வழிபாடு நடந்து வருகிறது. சிலைகள் பாதுகாப்பு பணியில், 65,000 போலீசார் ஈடுபட்டு உள்ளனர். சிலைகள் இருக்கும் இடங்களில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. விநாயகர் சிலைகளுக்கு, 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விழா குழுவினரும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வழிபாட்டுக்கு வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று, நீர் நிலைகளில் கரைக்க, போலீசார் அனுமதி அளித்துள்ளனர். விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க, வரும், 11, 14 மற்றும் 15ம் தேதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்ல, போலீசார் அனுமதி அளித்து உள்ளனர்.