மதுரை பழிக்குப்பழி கொலையில் ரவுடியின் தாய் உட்பட 7 பேர் கைது
மதுரை: மதுரையில் பழிக்குப்பழியாக நடந்த கொலை வழக்கில் பிரபல ரவுடியின் தாய் உட்பட ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.மதுரை, மேலஅனுப்பானடி ஹவுசிங்போர்டு 'கிளாமர்' கார்த்திக், 32, மார்ச் 22 இரவு தனக்கன்குளம் மொட்டமலை பகுதியில் ரவுடி வெள்ளைக்காளி கூட்டாளிகளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். 'கிளாமர்' கார்த்திக் மதுரை மாநகராட்சி தி.மு.க., முன்னாள் மண்டல தலைவர் வி.கே. குருசாமியின் சகோதரி மகன். குருசாமிக்கும், அ.தி.மு.க., முன்னாள் மாநகராட்சி மண்டல தலைவர் ராஜபாண்டிக்கும் அரசியல் ரீதியான பகை, 22 ஆண்டுகளாக குடும்ப பகையாக மாறி, இருதரப்பிலும் மாறி மாறி, 22 கொலைகள் நடந்தன. கொலை வழக்கில் சதி திட்டம் தீட்டியதாக வெள்ளைக்காளியின் தாய் மதுரை, காமராஜர்புரத்தைச் சேர்ந்த ஜெயக்கொடி, 65, கைது செய்யப்பட்டார். இவர் மீது ஏற்கனவே இரு வழக்குகள் உள்ளன. மேலும், கொலை வழக்கில் வெள்ளைக்காளி கூட்டாளிகள் சக்கிமங்கலம் நந்தகுமார், 20, ஸ்டேட் பாங்க் காலனி அசோகன், 32, காமராஜர்புரம் நவீன்குமார், 22, சிவகங்கை திருப்புவனம் மணல்மேடு முத்துகிருஷ்ணன், 18, பாலகிருஷ்ணன், 26, சென்னை கொளத்துார் கார்த்திக், 28, ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இதில், வழுக்கி விழுந்ததில் பாலகிருஷ்ணனுக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளார்.