சென்னை : வீட்டுவசதி வாரியம் கையகப்படுத்த உத்தேசித்த, 5,000 ஏக்கர் மற்றும், 'நோட்டீஸ்' அளித்த, 2,000 ஏக்கர் நிலத்தை, அதன் பழைய உரிமையாளர்களுக்கே கொடுக்க முடிவு செய்துள்ளதாக, வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி: மாவட்டங்களில் வீட்டு வசதி வாரிய திட்டங்களுக்காக தேர்வு செய்யப்பட்டதில், 10,000 ஏக்கர் நிலம் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இது தொடர்பாக, மக்களின் நிலை அறிய. ஒவ்வொரு கோட்ட அலுவலகத்திலும் புகார் பெட்டி வைத்து மனுக்கள் பெறப்பட்டன. இதன்படி, 16 இடங்களில் வைக்கப்பட்ட புகார் பெட்டிகள் வாயிலாக, 4,488 புகார் மனுக்கள் பெறப்பட்டன.இந்த மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு, சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. எவ்வித நோட்டீசும் கொடுக்காமல், கையகப்படுத்த உத்தேசிக்கப்பட்ட நிலையில், 5,000 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில், அதன் உரிமையாளர்கள் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.
அந்த நிலங்களை கையகப்படுத்துவது என்பது நடைமுறையில் சாத்தியமில்லை. எனவே, இந்த நிலங்களை, வாரிய உத்தேச திட்டத்தில் இருந்து விடுவிக்கிறோம். இது, அந்தந்த கோட்ட அலுவலகங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலங்களில் வசிப்போர், வாரிய தடையின்மை சான்று பெற வேண்டிய தேவை இருக்காது.இதேபோன்று, வாரியத்தின் சார்பில் நிலம் கையகப்படுத்த நோட்டீஸ் அளிக்கப்பட்ட நிலையில், 2,000 ஏக்கர் நிலம் உள்ளது. இதிலும், மக்கள் வீடு கட்டி வசித்து வருவதால், இந்த நிலங்களையும் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை கைவிடுவது என, முடிவு செய்து இருக்கிறோம்.இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலங்களின் உரிமையாளர்கள் தங்களின் ஆவணம் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். எஞ்சிய 3,000 ஏக்கர் நிலம் தொடர்பான விஷயங்களில், சில உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். அவர்களும் வழக்கு தொடராதவர்களும், தங்களின் உரிமை தொடர்பான உரிய ஆவணங்களை சமர்ப்பித்தால், இந்நிலங்கள் விடுவிக்கப்படும்.இன்னும் சில இடங்களில் நிலம் கையகப்படுத்த முடிவு செய்து, இழப்பீடு இறுதி செய்து, வைப்பு நிதியாக செலுத்தப்பட்டு இருக்கும். இத்தொகையையும், இது தொடர்பான பிற செலவு தொகைகளையும் திரும்ப பெற நடவடிக்கை எடுக்கிறோம்.இத்தொகை திரும்ப கிடைத்தவுடன், இந்த நிலங்கள் விடுவிக்கப்படும். அத்துடன், இழப்பீடு கொடுத்து முழுமையாக கையகப்படுத்தினாலும், நிலம் தொடர்ந்து பழைய உரிமையாளரால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. அங்கு ஏற்கனவே கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன என்பதற்கான ஆதாரத்தை காட்டி, இழப்பீட்டை திரும்ப செலுத்தினால். அந்த நிலங்களும் விடுவிக்கப்படும்.புதிதாக குடியிருப்புகள் கட்ட நிலம் தேவைப்பட்டால், நில தொகுப்பு திட்டம் வாயிலாக, உரிமையாளர் பங்களிப்புடன் புதிய வழிமுறைகள் கையாளப்படும். இழப்பீடு கொடுத்து கையகப்படுத்துவதை விட்டு விட முடிவு செய்கிறோம்.இது தவிர, வாரியத்தின் கட்டுப்பாட்டில் முழுமையாக உள்ள நிலங்களை, வேலி அமைத்து முறையாக பாதுகாக்க, வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறோம். தேவைப்பட்டால் மீண்டும் புகார் பெட்டி திட்டம் செயல்படுத்தப்படும்.வாரியத்தின் திட்டங்களில் விற்காமல் உள்ள, 5,000 வீடுகளை, படிப்படியாக பொது பிரிவினருக்கு வாடகைக்கு விடுவதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, நில உரிமையாளர்கள் நன்றி தெரிவித்தனர். அமைச்சர் முத்துசாமி, வீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன், வீட்டுவசதி துறை செயலர் காகர்லா உஷா உடன் இருந்தனர்.