பூந்தமல்லியில் பதுங்கிய 8 வங்கதேசத்தவர் கைது
சென்னை:சென்னை அருகே, உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்கதேசத்தினர் எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை நசரத்பேட்டை பகுதியில் வாடகை வீட்டில், வங்கதேசத்தினர் தங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த வீட்டில் நேற்று சோதனை நடத்தி, வங்கதேசத்தை சேர்ந்த, இரண்டு பெண்கள் உட்பட எட்டு பேரை கைது செய்தனர். அவர்கள், வட மாநிலத்தவர்கள் போல போலி ஆவணங்கள் தயாரித்து, ஆதாரமாக பயன்படுத்தி வந்தனர்.போலீஸ் விசாரணையில், அவர்கள் வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்கம் வந்து, அங்கிருந்து ரயிலில் தமிழகம் வந்தது தெரியவந்தது. நசரத்பேட்டையில் வீட்டை வாடகைக்கு எடுத்து, பழைய பொருட்களை வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். சில தினங்களுக்கு முன், மாங்காடு மற்றும் குன்றத்துார் பகுதியில் தங்கி இருந்த வங்கதேசத்தினர், 33 பேரை, டில்லி போலீசார் பிடித்து தமிழக போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில், மேலும் எட்டு பேர் கைதாகி உள்ளனர்.