காய்ச்சல், சளி, இருமல் 8 லட்சம் பேர் பாதிப்பு
சென்னை:தமிழகத்தில் காய்ச்சல், சளி, வறட்டு இருமல் உள்ளிட்டவற்றால், 8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக, மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்து உள்ளது.பருவகால மாற்றத்தின் காரணமாக, மாநிலம் முழுதும், இன்ப்ளுயன்ஸா, டெங்கு, சிக்குன் குனியா, நுரையீரல் தொற்று, டைபாய்டு உள்ளிட்ட காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகின்றன. இதில், இன்ப்ளூயன்ஸா காய்ச்சலால், 75 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வறட்டு இருமல், சளி, தலைவலியுடன் கூடிய காய்ச்சல் பாதிப்புகள், மக்களை பீடித்து வருகின்றன.இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் பருவநிலை பாதிப்பால், 8 லட்சம் பேர் வரை, ஏதேனும் ஒரு வகையில் காய்ச்சல், சளி, மூக்கு ஒழுகுதல், வறட்டு இருமல், உடல் சோர்வு, வலி உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், சிகிச்சை பெறுகின்றனர்.பருவ கால பாதிப்புகள் என்பதால், மக்கள் பயப்பட வேண்டாம்; அதேநேரம், அலட்சியமாகவும் இருக்க வேண்டாம். பாதிப்புக்கு ஏற்றவாறு சிகிச்சை பெறுவது அவசியம்.ஒரே பகுதியில் பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டால், அப்பகுதியில் சுற்றுச்சூழல் மாசடைந்து இருப்பதை உணர்ந்து, உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, தெரியப்படுத்த வேண்டும்.மேலும், https://ihip.mohfw.gov.in/cbs என்ற இணையதளத்திலும் சுயவிபரங்களை சமர்ப்பித்து, காய்ச்சல் தகவல்களை பதிவேற்றம் செய்யலாம். அதன்படி, அப்பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுவதுடன், காய்ச்சல் பாதிப்புகளைக் கண்டறிந்து, தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.இந்த பருவ கால பாதிப்புகள், ஜனவரி மாதம் வரை தொடரும் என்பதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.