உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாய்க்கடிக்கு சிகிச்சை பெற்று வந்த குரங்கு குட்டி வண்டலுாரில் இறப்பு

நாய்க்கடிக்கு சிகிச்சை பெற்று வந்த குரங்கு குட்டி வண்டலுாரில் இறப்பு

தாம்பரம், நாய்கள் கடித்துக் குதறியதால் காயமடைந்த குரங்கு குட்டி, வண்டலுார் பூங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தது. குரங்கு குட்டியை சிகிச்சைக்காக தன்னிடம் தர கோரி, சட்டப் போராட்டம் நடத்திய டாக்டர், குரங்கு குட்டி இறந்ததால் வேதனை அடைந்தார்.ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் கடந்தாண்டு டிச., 4ல் நாய்களுக்கு கருத்தடை முகாம் நடந்தது. அப்போது, நாய்களால் கடிபட்டு காயமடைந்த, 200 கிராம் எடையுள்ள குரங்கு குட்டியை, வனக் காவலர் கொண்டு வந்தார்.நாய்கள் கடித்ததில், குரங்கு குட்டியின் இடுப்பு பகுதிக்கு கீழ் செயல் இழந்தது. 'ரேபிஸ்' பாதிப்பும் இருந்தது.முகாமில் இருந்த, மதுரையைச் சேர்ந்த டாக்டர் வள்ளியப்பன், தன் குடும்ப உறுப்பினர் போல் குரங்கு குட்டியை கருதி, 10 மாதங்களாக உணவு, மருந்து அளித்து பராமரித்தார்.இந்நிலையில், குரங்கை அடைத்து வைத்துள்ளார் எனக்கூறி, கோவை மாவட்ட மிருகவதை தடுப்பு சங்கத்தைச் சேர்ந்த ஒருவர் புகார் அளித்தார். இதையடுத்து வனத்துறையினர், அக்., 26ல் அவரிடம் இருந்து குரங்கு குட்டியை பெற்று, சென்னை வண்டலுார் உயிரியல் பூங்காவில் ஒப்படைத்தனர்.குழந்தை போல வளர்த்ததால் பிரிய மனமில்லாத மருத்துவர், அதை தன்னிடம் ஒப்படைக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், 'என்னிடமிருந்து வாங்கிச் சென்று, வண்டலுார் உயிரியல் பூங்காவில் குரங்கு குட்டியை விட்டனர்.மீண்டும் உடல்நிலை பாதிக்க வாய்ப்புள்ளதால், குரங்கு குட்டி முழுமையாக குணமடையும் வரை, என் கட்டுப்பாட்டில்விட, வனத்துறைதுக்கு உத்தரவிட வேண்டும்' என, குறிப்பிட்டிருந்தார்.அதற்கு, 'அட்டவணைப்படுத்த பட்டியலில் இருப்பதால், தனியார் குரங்கை வளர்க்க இயலாது' என, பூங்கா நிர்வாகம் தெரிவித்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், வண்டலுார் உயிரியல் பூங்காவில் உள்ள குரங்கு குட்டியை, வரும் 9ம் தேதி காலை 11:00 மணிக்கு நேரில் பார்வையிட மனுதாரருக்கு அனுமதியளித்தார்.மேலும், குரங்கு குட்டி மருத்துவரை அடையாளம் கண்டு கொண்டதா என்பது குறித்து அறிக்கை அளிக்கவும், வனத்துறைக்கு உத்தரவிட்டார்.நீதிமன்ற உத்தரவின் படி, டாக்டர் வள்ளியப்பன், குரங்கை நேரடியாக சென்று பார்த்து வந்தார்.பூங்கா மருத்துவர்களின் பரிசோதனையில், குரங்கு குட்டியின் பின்மூட்டு முடக்கம் மற்றும் அதன் முதுகில் சிராய்ப்பு காயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், ரத்த பரிசோதனை மருத்துவ அறிக்கையில், மிதமான ரத்த சோகை இருப்பதும் தெரியவந்தது.இதையடுத்து, தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, குரங்கிற்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. பிற மருந்துகளுடன், பிசியோதெரபி மற்றும் இயக்கப் பயிற்சியும் அளிக்கப்பட்டது.பூங்கா மருத்துவர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, குரங்கு குட்டியின் உடல்நிலை படிப்படியாக முன்னேறி வந்த நிலையில், இரண்டு நாட்களாக சோர்வாகக் காணப்பட்ட குரங்கு குட்டி, சிகிச்சை பலனின்றி, நேற்று இறந்தது.குரங்கு இறப்பு குறித்து டாக்டர் வள்ளியப்பன் கூறுகையில், ''என்னால் ஒரு குரங்கை காப்பாற்ற முடியவில்லையே என்ற குற்ற உணர்வில் இருக்கிறேன்,'' என வேதனை தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ