உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொஞ்சம் விதிமீறல் ஓகே: வீட்டுவசதி வாரியம் முடிவு

கொஞ்சம் விதிமீறல் ஓகே: வீட்டுவசதி வாரியம் முடிவு

சென்னை : சிறிய அளவிலான விதிமீறல்களுக்கான தண்டனைகளை ரத்து செய்வதற்காக, ஆறு சட்டங்களில் திருத்தம் செய்ய, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில், வாடகை வீட்டுவசதி, அடுக்குமாடி குடியிருப்பு உரிமைகள் போன்ற பிரிவுகளில், தனித்தனி சட்டங்கள் உள்ளன. இந்தச் சட்டங்களில், பல்வேறு விதிமீறல்கள் குற்றங்களாக வரையறுக்கப் பட்டு உள்ளன. அத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு, அபராதம் உள்ளிட்ட தண்டனைகள் வழங்கப்படுகின்றன. ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான துறையில் ஈடுபடும் தனியார் நிறுவனங்களுக்கு, வணிக நடவடிக்கைகளில் எவ்வித தடையும் இருக்கக்கூடாது. இதற்கு தடையாக உள்ள விஷயங்களை சரி செய்ய, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதன் அடிப்படையில், துறை வாரியாக சட்டங்களில் உள்ள சில கடுமையான விதிகளை தளர்த்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளை மேற்கொள்ள, அந்தந்த துறைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வகையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையில், ஆறு சட்டங்களில் திருத்தங்கள் செய்வதற்கான வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

வீட்டுவசதி வாரிய சட்டம், குடிசை பகுதிகள் மேம்பாடு சட்டம் உள்ளிட்ட, ஆறு சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதில் சிறிய அளவிலான விதிமீறல்களுக்கு விதிக்கப்படும் குறைந்தபட்ச தண்டனைகளை ரத்து செய்ய முடிவு எடுத்துள்ளோம். உதாரணமாக, வீட்டுவசதி வாரிய ஒதுக்கீட்டில் வீடு பெற்றவர், அதில் அனுமதி இன்றி, கூடுதல் பகுதிகள் கட்டினால், 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இந்த விதிமீறல் தொடர்ந்தால், ஒவ்வொரு நாளுக்கும், 100 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்படும். இந்த தண்டனை, தற்போதைய சூழலில் தேவை இல்லை என, வாரியம் பரிந்துரைத்துள்ளது. அதன்படி, வீட்டுவசதி தொடர்பான, ஆறு சட்டங்களில், 14 பிரிவுகளை திருத்த முடிவு செய்யப்பட்டுஉள்ளது. குறிப்பாக, வீட்டுவசதி வாரிய சட்டத்தில் மட்டும், ஏழு பிரிவுகள் திருத்தப்பட உள்ளன. இது தொடர்பான வரைவுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சட்ட திருத்த மசோதாக்கள் தயாரிக்கப்பட்டு, வரும் சட்டசபை கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

6 சட்டங்கள் விபரம்

* வீட்டுவசதி வாரிய சட்டம் - 1961 * குடிசை பகுதி மேம்பாடு மற்றும் மாற்ற சட்டம் - 1971 * கட்டடங்கள் மற்றும் நில பயன்பாடு முறைப்படுத்தும் சட்டம் - 1978 * குறிப்பிட்ட வகை பொருட்களுக்கான சந்தை சட்டம் - 1996 * வாடகை வீட்டுவசதி சட்டம் - 2017 * அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் சட்டம் - 2022


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

NATARAJAN R
ஆக 28, 2025 22:31

விதிமீறல்கள் இல்லை என்றால் லஞ்சம் குறைவாக மட்டுமே வாங்க முடியும். ஆனால் அதே விதிமீறல்கள் இருந்தால் எவ்வளவு வேண்டுமானாலும் லஞ்சம் வாங்க முடியும். எனவே அரசு எப்போதும் விதிமீறல்களை வரவேற்கும். விதிமீறல்கள் இருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவது அரசு அதிகாரிகள்.


A.MOHAN
ஆக 26, 2025 11:35

கர்நாடக அரசாங்கம் அண்மையில் கர்நாடக மாநகராட்சிகள் திருத்தச் சட்டம், 2025 என்ற மசோதாவை நிறைவேற்றி, 15% வரை உள்ள சிறிய கட்டிடத் திட்ட விலகல்களை Deviations in Approved Building Plans அபராதத் தொகை வசூலித்து ஒழுங்குபடுத்தும் அதிகாரத்தை மாநகராட்சி ஆணையாளர்களுக்கு வழங்கியுள்ளது. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் ஸ்கூட்டர் பார்க்கிங் ஆக இருந்த முன்பகுதி தற்பொழுது வசதி மற்றும் தேவை கருதி தமது இடதுக்குள்ளேயே சிறிது நீடிப்பு செய்துள்ளதை Deviations in Approved Building பிளான்ஸ். எனவே இடிக்க நோட்டீஸ் கொடுப்போம் என்று அதிகாரிகள் மிரட்டி அவ்வபோது வசூல் செய்து வருவதை தடுத்திட கர்நாடக மாடல் 15% விதிமீரலை ரெகுலரைசேசன் செய்து அதிகாரிகளூக்கு லஞ்சமாக செல்லும் பணம், அரசுக்கு வருவாயாக கிடைக்கும். மக்களும் வரியை செலுத்தி நிம்மதியாக காலம் தள்ளுவார். திராவிட மாடல் அரசு செய்யுமா ?


ரங்ஸ்
ஆக 26, 2025 09:17

ஏம்பா விதி மீறல் இருக்கு. கவனிச்சா அட்ஐஸ்ட் பண்ணப்படும். அப்பிடியே வர்ற எலக்ஷன் ல வாக்கு எங்களுக்கு போட்டு ஜெயிக்க வச்சா விதிகள் வளைக்கப்படும். என்ன டீல் ஓகேவா


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஆக 26, 2025 07:35

தமிழகம் முழுவதும் சிறிய அடுக்குமாடி கட்டிடங்களில் எப்படியும் ஓனர் ஹவுஸ் என்று அனுமதியில்லாமல் கிச்சன் அமைத்து ஒரு வீடு இருக்கும். பிளான் அப்ரூவல் இருக்காது. இப்படி தமிழகம் முழுவதும் பல்லாயிரம் வீடுகள் இருக்கின்றன. பெரும்பாலும் அத்தகைய வீடுகளில் வயதான ஓனர்களே குடியிருப்பார்கள். இந்த வகை வீடுகளுக்கு வீட்டு வரியும் இருக்காது. அரசு இவற்றை ரெகுலரைஸ் செய்வதால் பலநூறு கோடிகள் ஒன் டைம் வருமானமும், வீட்டு வரியின் மூலம் தொடர் ஆண்டு வருமானமும் கிடைக்கும். அரசும் அதிகாரிகளும் யோசிக்க வேண்டும். ஏனெனில் இத்தகைய வீடுகளை இடிக்கவும் முடியாது, அப்படி இடித்தாலும் பல்லாயிரம் மூத்த குடிமக்கள் தெருவுக்கு வந்து அரசுக்கு பெரும் பிரச்சனையாக உருவெடுக்கும். அதற்கு பதிலாக அரசு வரி வருமானத்தை உயர்த்திக் கொள்வது புத்திசாலித்தனம்.


Mani . V
ஆக 26, 2025 06:33

கொஞ்சம் என்றால் இந்த லஞ்சம் கொடுப்பதைத்தானே சொல்கிறீர்கள்?


சமீபத்திய செய்தி