சிறையில் போன் வசதி குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகள் அளிக்க வழக்கறிஞர்கள் குழு
சென்னை; கைதிகளை சந்திக்க செல்லும் வழக்கறிஞர்களுக்கு, சிறையில் அளிக்கப்படும் வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகள் அளிக்க, பார் கவுன்சில் மற்றும் வழக்கறிஞர் சங்கங்களின் பிரதிநிதிகளை, சென்னை உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது.சிறையில் உள்ள கைதிகளை சந்திக்க செல்லும் வழக்கறிஞர்களுக்கு, புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வில், விசாரணைக்கு வந்தது. புழல் சிறையில், 'இன்டர்காம்' வசதி இன்னும் அமலில் உள்ளது. இதனால் கைதிகளை சந்தித்து பேசுவதில் சிரமம் உள்ளதாக, வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.அப்போது நீதிபதிகள், 'கைதிகள் தங்களின் குறைகளை வழக்கறிஞர்கள் வாயிலாகவே தெரியப்படுத்தும் நிலையில், இருவருக்கும் இடையேயான பேச்சு, ரகசியமாக இருக்க வேண்டியது முக்கியம். சிறை விதிகளை மீறும் சிறைத் துறை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர். மேலும், கைதிகளை சந்திக்க செல்லும் வழக்கறிஞர்களுக்காக செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து, மனுத் தாக்கல் செய்யவும், நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.இதையடுத்து, வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, சிறைத்துறை டி.ஜி.பி., சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், 'கைதிகளை, வழக்கறிஞர்கள் சந்திக்கும் நடைமுறை எளிமையாக்கப்பட்டு உள்ளது. 'புழல் சிறையில் மேற்கொள்ளப்பட்ட வசதியை, அனைத்து சிறைகளிலும் அமல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த வசதிகள் குறித்து, கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள் அளிக்க, வழக்கறிஞர்களின் பிரதிநிதிகள் குழுவை அமைக்கலாம்' என கூறப்பட்டுள்ளது.'உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலர் கிருஷ்ணகுமார் ஆகியோர் ஆஜராகி, 'கைதிகளை சந்திப்பதற்கு, இடையே அமைக்கப்பட்டிருந்த கண்ணாடி கூண்டு அகற்றப்படவில்லை' என்றனர். இதையடுத்து, சிறையில் ஆய்வு செய்து பரிந்துரைகள் அளிக்க, பார் கவுன்சில், வழக்கறிஞர் சங்கங்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைத்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை, நவம்பர் 6க்கு தள்ளி வைத்தனர்.