உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறை என்பது கைதிகளை சீர்திருத்தும் இடமாக இருக்க வேண்டும்: ஐகோர்ட்

சிறை என்பது கைதிகளை சீர்திருத்தும் இடமாக இருக்க வேண்டும்: ஐகோர்ட்

சென்னை:'சிறை என்பது கைதிகளை சீர்திருத்தும் இடமாக இருக்க வேண்டும்; அவர்களை முறையாக நடத்தாவிட்டால், வெளியில் வந்த பிறகும் குற்றச் செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது' என, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.வேலுார் சிறையில் உள்ள தன் மகன் சிவகுமாரை சந்திக்க அனுமதி கோரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கலாவதி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:ஆயுள் தண்டனை கைதியான என் மகனை, சிறை வார்டன்கள் தாக்கி, தனிமை சிறையில் அடைத்துள்ளனர்.வேலுார் டி.ஐ.ஜி., வீட்டில் இருந்து, 4.50 லட்சம் ரூபாய், பொருட்களை திருடியதாக குற்றம் சாட்டி, மகன் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை. உயிருக்கு ஆபத்து உள்ளதால், மகனை சேலம் சிறைக்கு மாற்ற வேண்டும். உரிய மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தவறு செய்தவர்களுக்கு எதிராக குற்ற வழக்கு பதிந்து, உடனே விசாரணையை துவங்க, சி.பி.சி.ஐ.டி.,க்கு உத்தரவிட்டிருந்தது.இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு முன், நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தவறு செய்த அதிகாரிகளுக்கு எதிராக, சி.பி.சி.ஐ.டி., எடுத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை, மூடி முத்திரையிட்ட உரையில், கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக் தாக்கல் செய்தார்.அதை பார்வையிட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:சிறைத்துறை டி.ஜி.பி., அளித்த அறிக்கையில், தவறு செய்த சிறைத்துறை டி.ஐ.ஜி., - எஸ்.பி., உள்ளிட்டோருக்கு எதிராக, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளார். அந்த அறிக்கை, தற்போது, மாநில அரசின் உள்துறை செயலரிடம் உள்ள தாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில், குறிப்பிடப்பட்ட அதிகாரிகள் மீது, துறை ரீதியான நடவடிக்கையை, விரைவாக உள்துறை செயலர் எடுக்க வேண்டும்.நீதிமன்றம் உத்தரவிட்டதும், சி.பி.சி.ஐ.டி., உடனே நடவடிக்கை எடுத்தது பாராட்டத்தக்கது. சிறை என்பது, அங்குள்ள கைதிகளை சீர்திருத்தும் இடமாக இருக்க வேண்டும். அங்கு, அவர்கள் முறையாக நடத்தப்படவில்லை எனில், வெளியில் வந்த பிறகும் குற்ற நடவடிக்கையில் ஈடுபட வாய்ப்புள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்கும்.இவ்வாறு உத்தரவிட்டு, விசாரணையை அக்., 21க்கு, நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை