வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அருமை முருகா சரணம்
பொள்ளாச்சி: தென்னை நார் தொழிலை மேம்படுத்த மத்திய அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, வரும் 4ம் தேதி திண்டுக்கல்லில் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது என, தேசிய தென்னை நார் கூட்டமைப்பினர் தெரிவித்தனர். நம் நாட்டில், 23,000 தென்னை நார் தொழிற்சாலைகள் உள்ளன. தென்னை நார் உற்பத்தியில் உலக தரம் வாய்ந்த பொருட்களை உற்பத்தி செய்து, 125 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், தென்னை நார் தொழிலில் உள்ள பிரச்னைகள், தேவையான வசதிகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு வாயிலாக கருத்தரங்கம் நடத்தப்பட உள்ளதாக தேசிய தென்னை நார் கூட்டமைப்பினர் தெரிவித்தனர். தேசிய தென்னை நார் கூட்டமைப்பு தலைவர் கவுதமன் கூறியதாவது: மத்திய அரசின், 'ஆத்ம நிர்வான் பாரத்' என்ற திட்டத்தின் கீழ், கிராமப்புற தொழில்களை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. தற்போது, மத்திய அரசின் கயிறு வாரியம் வாயிலாக குழு அமைத்து தென்னை நார் உற்பத்திக்கு தேவையான மூலதனங்கள், மானியம், தென்னை நார் தொழிலில் உள்ள மூலப்பொருட்கள் விலை மற்றும் தரம், உள்நாடு, வெளிநாடுகளில் சந்தைப்படுத்துவதற்குண்டான முயற்சிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இக்குழு வாயிலாக, வரும் 4ம் தேதி திண்டுக்கல்லில் கருத்தரங்கம் நடக்கிறது. கருத்தரங்கில், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை பார்வைக்கு வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, தென்னை நாரால் தயாரிக்கப்பட்ட பிரதமர் மோடி படம் பொறித்த கடிகாரம், முருகன் உள்ளிட்ட சுவாமி படங்கள், தென்னை நார் தட்டுகள் போன்றவற்றை காட்சிப்படுத்த தேசிய தென்னை நார் கூட்டமைப்பு முடிவு செய்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். கருத்தரங்கில் பங்கேற்க விரும்பும் தென்னை நார் உற்பத்தியாளர்கள், பொள்ளாச்சி கயிறு வாரிய மண்டல அலுவலரை 80895 94737 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருமை முருகா சரணம்