நகர்ப்புற வளர்ச்சி குழுமங்களுக்கு விரைவில் தனி செயல் திட்டம்
சென்னை:தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்படும் நகர்ப்புற வளர்ச்சி குழுமங்களுக்கு, நிர்வாக அமைப்பை வலுப்படுத்த செயல் திட்டம் தயாரிக்கும் பணிகளை, நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., துவக்கி உள்ளது.தமிழகத்தில் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் போன்று, பிற நகரங்களுக்கு வளர்ச்சி குழுமங்கள் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி, மதுரை, கோவை, திருப்பூர், ஓசூர் நகரங்களுக்கு, புதிய வளர்ச்சி குழுமங்கள் ஏற்படுத்த அரசு உத்தரவிட்டது. இதற்கான நிர்வாக அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, எல்லைகள் வரையறுக்கப்பட்டன.இருப்பினும், உள்ளூர் குழுமங்களில் இருந்து வேறுபட்டு, புதிய நகர்ப்புற வளர்ச்சி குழுமங்கள் செயல்பட வேண்டும் என, அரசு அறிவுறுத்தி உள்ளது. இதற்காக, சென்னை மட்டுமல்லாது, நாட்டில் பிற பெருநகரங்களில் வளர்ச்சி குழுமங்கள் எப்படி செயல்படுகின்றன; அதன் நிர்வாக அமைப்பு எப்படி உள்ளது என்ற விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில், புதிய நகர்ப்புற வளர்ச்சி குழுமங்களுக்கு தனியான செயல் திட்டம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து நகர், ஊரமைப்பு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மதுரை, கோவை, திருப்பூர், ஓசூரை தொடர்ந்து திருச்சி, சேலம் நகரங்களுக்கும் புதிய வளர்ச்சி குழுமங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. இந்த குழுமங்கள் முழுமையாக செயல்பட, நிர்வாக அமைப்பை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.இதற்காக, தனி செயல் திட்டம் தயாரிப்பதற்கான பணிகளை துவக்கி இருக்கிறோம். கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது, விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுப்பது, முழுமை திட்டங்கள் தயாரிப்பது மற்றும் தினசரி நடவடிக்கைகளை எப்படி மேற்கொள்வது என்பதற்கு வழிகாட்டியாக, இந்த செயல் திட்டம் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.