உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆவின் பொருட்கள் விற்பனை சென்னையில் 30 சதவீதம் உயர்வு

ஆவின் பொருட்கள் விற்பனை சென்னையில் 30 சதவீதம் உயர்வு

சென்னை:“சென்னை பெருநகர பகுதியில் ஆவின் பொருட்கள் விற்பனை, கடந்த ஆண்டை விட 30 சதவீதம் அதிகரித்துள்ளது,” என, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார். சென்னையில், அவர் அளித்த பேட்டி: சென்னை பெருநகர பகுதிகளில், ஆவின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை, 30 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு விற்பனை, 25 கோடி ரூபாயாக இருந்த நிலையில், இந்த ஆண்டு, 33 கோடி ரூபாயாக விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த மே மாதம் 29 கோடி; ஜூன் மாதம் 30 கோடி; ஜூலை மாதம் 33 கோடி ரூபாய் மதிப்பிற்கு, மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் விற்பனையாகி உள்ளன. பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விற்பனையாளர்களை ஊக்கப்படுத்த, ஆவின் பாலகங்களில் உறைகலன்கள் வழங்கப்படுகின்றன. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் உள்ள பாலகங்களில், பணியாளர்களை அதிகப்படுத்தவும் விற்பனையை கூட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள், ஆவின் பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய மையங்களாக செயல்படுகின்றன. இதன் வாயிலாகவும் விற்பனை பெருகி வருகிறது. தாட்கோ திட்டத்தில், பட்டியலின சமூகத்திற்கு பல திட்டங்களில் மானியம் வழங்கப்படுகிறது. தமிழகம் முழுதும், ஆவின் பாலகங்களில், பால் வினியோகத்தை அதிகப்படுத்தும் பணி நடக்கிறது. ஆவின் சார்பில், 200க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் விற்கப்படுகின்றன. ஆனால், அனைத்து ஆவின் பாலகங்களிலும், அனைத்து பால் பொருட்களும் கிடைப்பதில்லை. இதை சரிசெய்யும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ