3 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட தலைமறைவு குற்றவாளி கைது
சென்னை: மோசடி வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பின், இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.சென்னை சூளைமேடு மேத்தா நகரை சேர்ந்தவர் கோதண்டராமன், 59. இவரிடம், 2017ல், சென்னை கொடுங்கையூரை சேர்ந்த இப்ராஹிம், 54, என்பவர், தான் நடத்தி வந்த, 'பாத்திமா டிரேடர்ஸ்' என்ற கடையை விரிவுபடுத்த, 35 லட்சம் ரூபாய் கடன் வாங்கி, மோசடி செய்து உள்ளார். இதுகுறித்து கோதண்டராமன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கில், இப்ராஹிம் கைதாகி, ஜாமினில் வெளியே வந்தார். இவர் மீதான வழக்கு, சென்னை எழும்பூரில் உள்ள மத்திய குற்றப்பிரிவு மற்றும் சி.பி.சி.ஐ.டி., வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில், தகுந்த சாட்சிகளுடன் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், 2023ம் ஆண்டு, இப்ராஹிமிற்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை, 10,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து, இப்ராஹிம் தலைமறைவானார். வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்ததால், கடந்த மாதம் 17ம் தேதி, இப்ராஹிமிற்கு நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. இதையடுத்து, சென்னையில் தலைமறைவாக இருந்த இப்ராஹிமை, மத்திய குற்றப்பிரிவு போலீசார், நேற்று முன்தினம் கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.