சென்னை : மனைவியின் பிரசவத்தின் போது, அறுவை சிகிச்சை அரங்கில் இருந்த, 'யு டியூபர்' இர்பான், தொப்புள் கொடியை, 'கட்' செய்த வீடியோவை சமீபத்தில் பகிர்ந்தார்.அது சர்ச்சையான நிலையில், இர்பான் மீதும், பிரசவம் பார்த்த டாக்டர் மற்றும் மருத்துவமனை மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மருத்துவ ஊரக நலப்பணிகள் துறை இயக்குனர் ராஜமூர்த்தி தெரிவித்துள்ளார்.சென்னையைச் சேர்ந்த, 'யு டியூபர்' இர்பான் - ஆசிபா தம்பதிக்கு, ஜூலை 24ம் தேதி தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. டாக்டர்கள் கண்டனம்
குழந்தை பிறக்கும் போது, அறுவை சிகிச்சை அறையில், குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை, இர்பான் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.வீட்டில் இருந்து, 'ஜூஸ்' குடித்து விட்டு மருத்துவமனைக்கு வருவது, அங்கு பிரசவத்திற்கு முந்தைய கவனிப்பு மற்றும் பிரசவத்தின் போது நடக்கும் நிகழ்வுகள் பலவற்றை, வீடியோவில் பதிவிட்டுள்ளார். இது, தமிழ்நாடு மருத்துவ சட்டத்தின்படி தவறு என, டாக்டர்கள் கண்டனம் தெரிவித்தனர்.ஏற்கனவே, தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை துபாயில் பரிசோதித்து, அது தொடர்பான வீடியோவை கடந்தாண்டு வெளியிட்டது சர்ச்சையானது.அந்த வீடியோ தொடர்பாக பதிலளிக்க இர்பானுக்கு, மருத்துவ ஊரக நலப்பணிகள் இயக்குனரகம், 'நோட்டீஸ்' அனுப்பியது; பின், வீடியோவை நீக்கினார்.ஆனால், சம்பவம் குறித்து மன்னிப்பு கேட்டு, 'யு டியூப்'பில் வீடியோ வெளியிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதுவரை வீடியோ வெளியிடாத நிலையில், தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை வெளியிட்டு அடுத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார்.இதுகுறித்து, மருத்துவ ஊரக நலப்பணிகள் துறை இயக்குனர் ராஜமூர்த்தி கூறியதாவது:குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் வெட்டும் வீடியோவை, இர்பான் வெளியிட்டுள்ள நிலையில், அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்.மேலும், பாலினத்தை அறிவித்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்டு, வீடியோ வெளியிடாதது குறித்தும் விளக்கம் கேட்கப்பட்டு, அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்படும்.பிரசவத்தின் போது வீடியோ எடுக்கவும், தொப்புள் கொடியை வெட்டவும், பணியில் இருந்த டாக்டர்கள் எப்படி அனுமதித்தனர் என்பது குறித்தும் விளக்கம் கேட்கப்படும்.நோட்டீஸ்
பிரசவ வார்டில், வீடியோ எடுக்க எத்தனை பேர் இருந்தனர் என்பது தெரியவில்லை. பிரசவத்தை டாக்டர் நிவேதிதா பார்த்ததாக தெரிகிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு பரிந்துரை செய்யப்படும். அதேபோல, பிரசவம் நடந்த, 'ரெயின்போ' மருத்துவமனையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்வது குறித்து, அவர்களுக்கு விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பப்படும்.அதிகாரிகள் அந்த மருத்துவமனையில் ஆய்வு நடத்தி உள்ளனர். சர்ச்சைக்கு காரணமான அந்த வீடியோவை, இர்பானே நீக்கி விட்டார்.இவ்வாறு அவர் கூறினார்.அரசியல் பலத்தால் தப்பிக்கிறார்!அறுவை சிகிச்சை அரங்கிற்குள் நடக்கும் அனைத்தையும், வீடியோவில் இர்பான் காட்டியுள்ளார். வயிற்றை கிழிப்பதை பார்க்கிறார். எல்லாமே, 'வீடியோ'வாக பதிவு செய்கின்றனர். பெண் குழந்தை பிறந்த உடனே, மகப்பேறு டாக்டர், 'தொப்புள் கொடியை வெட்டுகிறீர்களா' என்று கேட்கிறார். கேக் வெட்டுவது போல, இர்பானை ஊக்கப்படுத்துகின்றனர். இந்த விவகாரத்தில் மருத்துவ கவுன்சில் தலையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடந்த முறை, அரசியல் பலத்தால் தப்பித்தார் என்பதே உண்மை. மன்னிப்பு கேட்டதால் விட்டு விட்டோம் என்றால், நாளை இன்னொருவர் தவறு செய்வதற்கு முன், அவரிடமும் மன்னிப்பு கடிதம் முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.பிரசவம் நடந்த மருத்துவமனையில் உள்ள, 'ஸ்கேன்' பரிசோதனை கருவிகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இதே டாக்டரால், இதே மருத்துவமனையில் கருவின் பாலினம் அறிந்து சொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.மருத்துவமனை, டாக்டர் மற்றும் இர்பானின் அரசியல் பின்புலம் அறிந்து, மன்னிப்பு கடிதம் பெற்று அவர்களை விடுவிக்க, இது பாவமன்னிப்பு வழங்கும் இடம் இல்லை.- அனுரத்னா,மகப்பேறு டாக்டர்,அரசு மருத்துவமனை, பொன்னேரி***