சென்னை : சர்வதேச கடத்தல் கும்பலிடம் இருந்து போதைப் பொருள் வாங்கி உபயோகப்படுத்தியதாக, திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு உள்ளார். நடிகர் -- நடிகையர் பங்கேற்கும் இரவு விருந்துகளில், 'கோகைன், மெத் ஆம்பெட்டமைன்' போன்ற போதைப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருவதால், தமிழ் திரையுலகத்தினர் கலக்கத்தில் உள்ளனர்.சென்னை நுங்கம்பாக்கத்தில், 'லார்டு ஆப் தி ட்ரிங்க்ஸ்' என்ற சொகுசு 'பார்' உள்ளது. இங்கு, கடந்த மாதம் 22ம் தேதி ஓய்வுபெற்ற டி.எஸ்.பி.,யின் மகன் செல்வபாரதி, 28, தரப்பினரும், மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையைச் சேர்ந்த அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி பிரசாத், 33, தரப்பினரும் மோதிக் கொண்டனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=y9vq5dq0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 11 கிராம் கோகைன்
பிரசாத்துடன் வந்திருந்த தொழில் அதிபர்களான, விருகம்பாக்கத்தைச் சேர்ந்த கணேஷ்குமார், 44; போரூரைச் சேர்ந்த தனசேகர், 29; தி.மு.க., பிரமுகரான துாண்டில் ராஜா, 36, ஆகியோர் பீர் பாட்டிலை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்.பின், சம்பவ இடத்திற்கு சென்ற அ.தி.மு.க., பிரமுகரான அஜய் வாண்டையார் என்ற அஜய் ரோகன், முக்குலத்தோர் புலிப்படையைச் சேர்ந்த ரவுடி நாகேந்திர சேதுபதி என்ற சுனாமி சேதுபதி, 33, ஆகியோர், அந்த மதுக்கூடத்தை அடித்து நொறுக்கி சூறையாடினர்; செல்வபாரதி தரப்பினர் மீது கொலை வெறி தாக்குதலும் நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து, பிரசாத், அஜய் ரோகன் உள்ளிட்டோரை கைது செய்தனர். மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் பதுங்கியிருந்த துாண்டில் ராஜா கைதாகி, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.இவர்களின் மொபைல் போன் தொடர்புகளை, போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் பிரசாத் தொடர்பில் இருந்ததையும், கோகைன், மெத் ஆம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருட்களை வாங்கி, மென்பொருள் நிறுவன ஊழியர்கள், தொழில் அதிபர்கள், நடிகர் - நடிகையருக்கு விற்று வந்ததையும் கண்டறிந்தனர்.இதையடுத்து, பிரசாத்தின் வலது கரமாக செயல்பட்ட சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த பிரிட்டோ எனப்படும் பிரதீப்குமாரை, 38, போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவருடன், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பதுங்கியிருந்த, மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள கானா நாட்டைச் சேர்ந்த ஜான், 38, என்பவரும் கைதானார். இவர்களிடம் இருந்து, 11 கிராம் கோகைன், 40,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். அதன்பின், பிரதீப்குமார் மற்றும் ஜான் ஆகியோரின் மொபைல் போன்களை, போலீசார் ஆய்வு செய்தனர். இருவரும் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதையும் உறுதி செய்தனர். அவர்களிடம் இருந்து பிரசாத் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக, பல முறை கிலோ கணக்கில் கோகைன், மெத் ஆம்பெட்டமைன் போதைப் பொருட்கள் வாங்கி உள்ளார் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, பிரசாத் மற்றும் அவரின் கூட்டாளிகளை காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது பிரசாத், தீங்கிரை என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறார். அந்த படத்தின் கதாநாயகனாக, ரோஜா கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்த ஸ்ரீகாந்த் நடித்து வருகிறார். ஸ்ரீகாந்திற்கும், பிரசாத்திற்கும் இடையே கோகைன், மெத் ஆம்பெட்டமைன் போதைப் பொருள் தொடர்பாக, 'வாட்ஸாப்' உரையாடல் நடந்துள்ளதையும் போலீசார் கண்டறிந்தனர்.பிரதீப்குமார், ஜான் ஆகியோரிடம் இருந்து, 1 கிராம் கோகைனை 7,000 ரூபாய்க்கு வாங்கி, நடிகர் - நடிகையர் உள்ளிட்டோருக்கு 12,000 ரூபாய்க்கு பிரசாத் விற்று வந்துள்ளார். அந்த வகையில் நடிகர் ஸ்ரீகாந்த், 'கூகுள்பே' வாயிலாக 5 லட்சம் ரூபாய் அனுப்பி, பிரசாத்திடம் 40 முறை கோகைன் வாங்கி உள்ளார்; மற்ற வழிகளில் எவ்வளவு பணம் கொடுத்து வாங்கியுள்ளார் என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது. அவரின் வங்கி கணக்குகளும் ஆய்வு செய்யப்படுகின்றன. ஸ்ரீகாந்த் வீடு, காரில் சோதனை நடந்தது. வீட்டில் இருந்து 11 கிராம் கோகைன் பறிமுதல் செய்யப்பட்டது. நடிகர் - நடிகையர் பங்கேற்கும் இரவு பார்ட்டிகளில், கோகைன், மெத் ஆம்பெட்டமைன் போதை விருந்து அளிக்கப்பட்டு இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.இயக்குநர் விஷ்ணுவர்தன் சகோதரரும், கழுகு என்ற பட நடிகருமான கிருஷ்ணாவுடன் ஸ்ரீகாந்த் நட்பில் இருந்துள்ளார். அதனால், போதைப் பொருள் விவகாரத்தில் கிருஷ்ணாவுக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.மேலும், இரவு பார்ட்டிகளில் போதை விருந்தில் பங்கேற்ற நடிகர் - நடிகையர் குறித்த தகவலை, போலீசார் திரட்டி விசாரிக்க உள்ளனர். இதனால், தமிழ் திரையுலகினர் கலக்கத்தில் உள்ளனர். பரிசோதனையில் உறுதி
கோகைன் உள்ளிட்ட போதைப் பொருள் பழக்கம் உள்ளவரா என்பதை உறுதி செய்ய, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், நடிகர் ஸ்ரீகாந்தின் ரத்த மாதிரியை எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவர் போதைப் பொருள் பயன்படுத்தி வந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ஸ்ரீகாந்த் நேற்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில், நேற்று மாலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஸ்ரீகாந்த், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை, ஜூலை 7ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி தயாளன் உத்தரவிட்டார்.