கொங்கு மண்டலத்தில் கூடுதல் மின்சாரம்; 32 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி தர சம்மதம்
சென்னை : தமிழகம் முழுதும் அதிக மின்சாரத்தை எடுத்து செல்ல, நான்கு, 765 கிலோ வோல்ட் திறனில் துணை மின் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டதில், கோவையில் மட்டும் இன்னும் பணிகள் துவங்கப்படவில்லை. இதனால் கொங்கு மண்டலத்தில், கூடுதல் மின்சாரம் எடுத்து வருவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, கோவை துணை மின் நிலையத்திற்கு, 32 ஏக்கரை விரைந்து கையகப்படுத்தி தர, வருவாய் துறை சம்மதம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, துாத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் காற்றாலை, சூரியசக்தி மின் நிலையங்கள் அதிகளவில் அமைக்கப்படுகின்றன. அந்த மின்சாரத்தை சென்னை, கோவைக்கு எடுத்து வருவதற்கு, திருவள்ளூர் மாவட்டத்தில் வட சென்னை அனல் மின் நிலைய வளாகம், கள்ளக்குறிச்சி அரியலுார், விருதுநகர் மற்றும் கோவையில் தலா ஒரு, 765 கிலோ வோல்ட் திறனில் துணை மின் நிலையமும், அவற்றை இணைக்க, அதே திறனில் மின் வழித்தடங்களும் அமைக்கும் பணியை, மின் வாரியம் துவக்கியுள்ளது. பணியில் தாமதம்
வட சென்னை - அரியலுார் துணை மின் நிலையங்கள், மின் வழித்தட பணி, 2014ல் துவங்கி, 2022ல் முடிவடைந்து, மின்சாரம் எடுத்து செல்லப்படுகிறது.அரியலுார் துணை மின் நிலையம், வேலுார் திருவலத்தில் உள்ள பவர்கிரிட் நிறுவனத்தின், 765 கி.வோ., துணை மின் நிலையத்துடன் இணைக்கப்பட்டு உள்ளது. திருவலம் வழியாக, பிற மாநிலங்களில் இருந்து மின்சாரம் வருகிறது. விருதுநகர், 765 கி.வோ., துணை மின் நிலையம், கோவை, 765 கி.வோ., துணை மின் நிலையத்துடன் இணைக்கப்பட உள்ளது. தற்போது, விருதுநகர் துணை மின் நிலைய பணி முடிவடைந்துள்ளது. அங்கிருந்து, கோவைக்கு வழித்தடம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.தென் மாவட்டங்களில் உற்பத்தியாகும் மின்சாரம், விருதுநகர் வழியாக கோவைக்கு எடுத்து வரப்பட்டு, கொங்கு மண்டலத்தில் வினியோகம் செய்யப்பட உள்ளது. நான்கு துணை மின் நிலையங்களையும், 2020 - 21ல் செயல்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டது. உரிய இழப்பீடு
ஆனால், இன்னும் கோவையில் துணை மின் நிலையம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் துவங்கப்படவில்லை. இதற்கு நிலம் கையகப்படுத்தும் பணியில் ஏற்பட்ட பாதிப்பே காரணம். துணை மின் நிலையத்திற்கு, 99 ஏக்கர் தேவை. அதில், 67 ஏக்கர் உள்ள நிலையில், இன்னும், 32 ஏக்கர் கையகப்படுத்த வேண்டும். இந்த பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கோவை துணை மின் நிலையம், திருப்பூர் மாவட்டம், குன்னத்துார் அருகில் கவுத்தம்பாளையம் என்ற இடத்தில் அமைக்கப்பட உள்ளது. கோவை, ஈரோடு மற்றும் அதை சுற்றிய பகுதிகளில் தொழில் வளர்ச்சி அதிகரித்து வருகிறது.அதற்கு ஏற்ப, அந்த பகுதிகளில் கூடுதல் மின்சாரம் கையாளப்பட வேண்டும். இதற்காகவே, 4,000 மெகா வாட் மின்சாரத்தை கொங்கு மண்டலத்திற்கு எடுத்து வர, கோவை, 765 கி.வோ., துணை மின் நிலையம் அமைக்கப்படுகிறது. நிலம் கையகப்படுத்துதலில் ஏற்பட்ட தாமதத்தால், கோவையில் மட்டும் இன்னும் துணை மின் நிலையம் அமைக்கும் பணி துவங்கப்படவில்லை. எனவே, அத்திட்ட பணிகளை விரைந்து துவக்கி, செயல்பாட்டிற்கு கொண்டு வர, தனியார் வாயிலாகவே துணை மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் அவசியம் குறித்து, பல தரப்பினரிடமும் தெரிவிக்கப்பட்டது. இதனால், தேவைப்படும் கூடுதல் நிலத்தை விரைந்து கையகப்படுத்தி தர, வருவாய் துறை சம்மதம் தெரிவித்துள்ளது. நிலம் வழங்குவோருக்கு, உரிய இழப்பீட்டை அரசு வழங்கும். இவ்வாறு அவர் கூறினார்.